Pawan Kalyan Net Worth: மொத்த ஆந்திராவும் இவர் கண்ட்ரோல்.. அப்போ சொத்து மதிப்பு எத்தனை கோடிகள்?
ஹைதராபாத்: இன்றைக்கு மொத்த ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களுக்கு குஷியான நாள். சினிமாவில் பவர் ஸ்டார், அரசியலில் துணை முதலமைச்சர் என ஜாம்பவனாக உயர்ந்து நிற்கும் பவன் கல்யாணுக்கு 54வது பிறந்தநாள். இதனால் திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவரது 54 வது பிறந்த நாளில் அவரது சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பவன் கல்யாண், அக்கட அம்மி இக்கட அப்பாயி என்ற படத்தின் மூலம் கடந்த 1996ஆம் ஆண்டு திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது 30 ஆண்டு கால திரைத்துறை வாழ்க்கையில் ஆண்டுக்கு ஒரு படம் நடித்துக் கொண்டு உள்ளார். இந்த 30 படங்களில் அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும், தனது அண்ணன் சிரஞ்சீவி தொடங்கிய அரசியல் கட்சியான பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்து பணியாற்றியது தொடங்கி, அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜன சேனா என்ற சொந்த கட்சியை நிறுவியது வரை என இவரது அரசியல் பிரவேசமும் அவரை இன்றைக்கு ஆந்திராவின் துணை முதலமைச்சராக ஆக்கியுள்ளது.

அரசியல்: கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் ஆந்திரா சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆந்திராவின் துணை முதலமைச்சராக உருவெடுத்துள்ளார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும் தனது ரசிகர்களுக்கு எப்படியாவது ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தில் நடிப்பதற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார். கடந்த மாதத்தில் ஹரஹர வீர மல்லு படம் வெளியானது. செப்டம்பர் மாதத்தில் ஓ.ஜி என்ற படம் வெளியாகவுள்ளது.
சொத்து மதிப்பு: கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டபோது பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார். அதாவது அவருக்கு ரூபாய் 164 கோடிகள் மதிப்பிலான சொத்துகள் உள்ளது என்றும், ரூபாய் 65 கோடிகள் வரை கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் இவருக்கு பிரதானமான வருமானம் கொடுக்க கூடிய விஷயம் என்றால் ஒன்று சினிமாவில் சம்பளம், இரண்டு சட்டமன்ற உறுப்பினராக சம்பளம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் இருந்து தான் என்று கூறப்படுகிறது. ஆந்திராவின் துணை முதலமைச்சராக அவர் பதவி ஏற்ற போது தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வாழ்த்து பெற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சம்பள விபரம்: இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 50 கோடிகளில் இருந்து 60 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகிரார் என்று கூறப்படுகிறது. விஜயவாடாவில் உள்ள ஒரு வீட்டின் விலை ரூபாய் 16 கோடிகள் மதிப்பு இருக்கும் எனவும் , ஜூபிலி ஹில்ஸில் உள்ள வீட்டின் மதிப்பு ரூபாய் 12 கோடி இருக்கும் எனவும் , பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஒரு பிளாட்டின் விலை ரூபாய் 1.75 கோடிகள் வரும் என்றும் கூறப்படுகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரண்டு மாநில ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் இவரது படங்களுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











