»   »  பில்லா ரஜினிக்கு சமர்ப்பணம் - அஜீத்

பில்லா ரஜினிக்கு சமர்ப்பணம் - அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ajith with Nayantara
பில்லா படம் எனது படம் அல்ல. இதை ரஜினிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அஜீத் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கலக்கிய பில்லாவை, அஜீத் நடிக்க அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர். பிரமாதமாக படமும், பாடல்களும் வந்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பியுள்ள நிலையில், அஜீத் செய்தியாளர்களைச் சந்தித்து பில்லா குறித்து பேசினார்.

முன்பு போல இறுக்கமாகவும், பதட்டமாகவும் இல்லாமல் படு ரிலாக்ஸ்டாக, நிதானமாக பேசினார் புத்தம் புது அஜீத்.

க்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்த ஒரு மணி நேர செய்தியாளர் சந்திப்பின்போது அஜீத் கூறியவற்றிலிருந்து சில பகுதிகள் ..

பில்லா -2007 குறித்து சொல்லுங்களேன் ..

முதலில் இது எனது படம் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்து பெரும் வெற்றி பெற்ற பில்லா படத்தை எனது பாணியில் கொடுக்க முயன்றுள்ளோம். பில்லா இன்னும் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தில் உள்ளது.

பில்லா -2007, ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான டான் படத்தின் ரீமேக் என பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ரஜினி சாரின் பில்லாவைத்தான் ரீமேக் செய்துள்ளோம்.

பில்லா ரீமேக்குக்கு முன்பு ரஜினியை சந்தித்தீர்களா?

ஆமாம். ரஜினி சார்தான் இந்தப் படத்தை செய்ய உந்துதலாக இருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ரீமேக் ஐடியா இருந்தது. ரீமேக் படத்தில் நடிப்பதாக இருந்தால் பில்லாவில் நடிப்பது என்ற முடிவில் இருந்தேன். பில்லாவை ரீமேக் செய்ய முடிவெடுத்ததும் நேராக ரஜினி சாரிடம் சென்றேன். அவரிடம் ஒப்புதல் வாங்கினேன். பிறகுதான் நடிக்க முடிவு செய்தேன்.

பில்லாவை ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவித்ததும், ரஜினி சார் எனக்கு கை குலுக்கி, முதுகில் தட்டிக் கொடுத்த வாழ்த்துக்களைத் தெரிவித்து தைரியமாக செய்யுங்கள் என்றார். இதற்காக நான் அவருக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

மேலும் படப்பிடிப்பு தொடங்கியதும், ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் ரஜினி சாரிடம் ஆலோசனை கேட்கத் தவறவில்லை. உண்மையில் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரஜினி சாரின் ஒப்புதலுடன்தான், அவரது ஆலோசனையின் பேரில்தான் செதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டினார். பில்லா ரீமேக், நிச்சயம் ரஜினி சாருக்கு பெருமை சேர்க்கும், கெளரவத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

சூப்பர் ஸ்டார் இமேஜுக்கு வரும் முயற்சியா இது?

நிச்சயமாக இல்லை. ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் இருக்க முடியும். அது ரஜினி சார்தான். ரஜினி சாரின் படங்களை ரீமேக் செய்வதில் தவறில்லை. இப்போதைய நடிப்புத் தலைமுறைக்கு ரஜினியும், கமலும்தான் ஆதர்ச முன்னோடிள். அவர்கள் இருவரின் சாயலும் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது.

விஜய்யுடன் உங்களது உறவு எப்படி உள்ளது?

எப்போதும் எனக்கும் விஜய்க்கும் இடையே மோதல் இருந்ததில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். ஆனால் அதன் பின்னர் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்க நான் விரும்பவில்லை. அது எனக்கு அசவுகரியமாக இருந்தது. அதுதான் நான் தனி ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததற்கு ஒரே காரணம். மற்றபடி எங்களுக்குள் எந்த மோதலும் இருந்ததில்லை.

எங்களுக்குள் போட்டி இருந்திருக்கிறது. ஆனால் அது முற்றிலும் தொழில் ரீதியிலான போட்டி மட்டுமே. தனிப்பட்ட மோதல் இல்லை.

முன்பை விட பக்குவமாக, நிதானமாக பேசுகிறீர்களே ..

எல்லாவற்றுக்கும் வயதுதான் காரணம். முன்பை விட நான் இப்போது நன்கு பக்குவமாகியுள்ளதாக நினைக்கிறேன். இப்போது எனக்கு 37 வயதாகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் என்னை வந்து சந்தித்தால், இதை விட மெச்சூர்டாக இருப்பேன்.

நயனதாரா, நமீதா குறித்து ..

நல்ல நடிகைகள்.

அடுத்த படம் ..

அக்பர் என்ற படத்தில் நடிக்கிறேன். ஐங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜு சுந்தரம் இயக்கவுள்ளார்.

பில்லா ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆலோசனைப்படி டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகிறது.

எதிர்காலத்தில் மீண்டும் ரேஸில் பங்கேற்பீர்களா?

அந்த ஐடியாவே இல்லை. இப்போதெல்லாம் டிவியில் பார்ப்பதோடு சரி, ரேலிஸ் கலந்து கொள்ளும் எண்ணமே கிடையாது.

டிவி, பத்திரிக்கைளுக்கு ஏன் தனி பேட்டிகள் கொடுப்பதில்லை?

விசேஷ காரணம் எதுவும் இல்லை. நடிகர் என்பதைத் தாண்டி, நான் ஒரு தனி மனிதனும் கூட. எனது தனிமையை நான் இழக்க விரும்பவில்லை. எனது திரைப்பட வாழ்க்கை குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு வார்த்தை கூட பேச விரும்பவில்லை என்றார் அஜீத்.

குட் லக் பில்லா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil