»   »  எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு கமல் குரல்

எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு கமல் குரல்

Subscribe to Oneindia Tamil
Kamal
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமும், ஐ.நா. சபையும் இணைந்து மேற்கொள்ளும் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சித் திட்டப் பிரசாரத்தில் கமல்ஹாசனும் கை கோர்த்து, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இனி ஒரு விதி செய்வோம் என்ற பெயரிடப்பட்டுள்ள முதல் பகுதி பிரசாரம் நேற்று தொடங்கியது. சென்னை எஸ்.ஐ.டி.இ.டி மகளிர் கல்லூரி வளாகத்தில் இதை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் முன்பு எச்ஐவி பாதிப்புக்கு ஆளானவர்களின் உரிமையைக் காப்போம் என்று கமல்ஹாசன் உறுதி மொழி ஏற்றார். பின்னர் தானே இயற்றிய விழிப்புணர்வுக் கவிதையை கமல் வாசிக்க, மாணவிகள் திரும்பக் கூறி உறுதி மொழி ஏற்றனர்.

கமல்ஹாசன் இயற்றியுள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை:

எச்.ஐ.வி. தாக்குண்ட ஒருவருக்கு
எனக்குள்ள உரிமைகள் அனைத்தும்
உண்டென வாழவும், வளரவும், கற்கவும்,
களிக்கவும், கனவுகள் காணவும்,
அவர் தம் உரிமைக்கு குரல் கொடுப்பதும்,
உதவிக்கு தோள் கொடுப்பதும்
என் தலையாய கடமை.

இதற்காக
இனி எத்தனை புதிய விதிகள் தேவையோ,
அத்தனையும் செய்வேன்
அதை எந்த நாளும் காப்பேன்...!

எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், எச்.ஐ.வி. பாதிப்போடு வாழும் மக்களுக்கு பரிவும், ஆதரவும், உதவியும் தேவை. எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்கள் மீது இந்த சமுதாயம் காட்டும் பாரபட்சமும், நிராகரிப்பும் அவர்களை வெளியே வர விடாமல் முடக்கிப் போட்டு விடுகின்றன. இதனால் அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல நடமாட முடியவில்லை, வாழ முடியவில்லை.

எச்.ஐ.வி. பாதிப்போடு உள்ளவர்கள், துணிச்சலோடு அந்த நோயை எதிர்த்துப் போராடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து இந்த மேடையை நான் பகிர்ந்து கொள்வதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் துணிச்சலுடன் இருப்பதைப் போல மற்றவர்களையும் மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது.

இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் தூதுவராக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதைப் பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற விளம்பரப் பிரசாரங்களில் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. ஆனால் இப்போது கலந்து கொள்வதற்காகப் பெருமைப்படுகிறேன் என்றார் கமல்.

உலக எய்ட்ஸ் தினமான நாளை, தமிழகத்தின் 31 மாவட்டங்ளிலும் இந்த உறுதிமொழி எடுக்கப்படவுள்ளது. மேலும் ரேடியோ நிலையங்ளும் இந்த உறுதிமொழியை ஒலிபரப்பவுள்ளன.

மேலும் இணைய தளம் மூலமாகவும் இந்த உறுதிமொழியை ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி http://www.letsmakeitright.in/.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாஹு பேசுகையில், எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள
முன்வருவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது என்றார்.

ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் பீட்டல் போல்ட் கூறுகையில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான சமூகப் பார்வையை மாற்றும் நோக்கிலேயே இந்த பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மக்களையும் சென்றடைய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.

கமல்ஹாசன் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களாகிய நாமும் நாளை மறவாமல் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.

Read more about: kamal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil