புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள்... சிசிடிவி காட்சிகளை பார்த்து கதறும் ரசிகர்கள்
பெங்களூரு : கன்னட சினிமாவின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ்ராஜ்குமாரின் சகோதரருமான புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக அக்டோபர் 29 ம் தேதி உயிரிழந்தார்.
முதல் நாள் இரவில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த புனித் ராஜ்குமார், அதோடு மறுநாள் காலை ஜிம்மிற்கு சென்று வழக்கம் போல் ஒர்க்அவுட் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

புனித் ராஜ்குமார் மரணம்
புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியில் பரவியதும் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

பிரபலங்கள் அஞ்சலி
இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். திரையுலகை சேர்ந்த ஏராளமானவர்கள் நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதல்வர் புனித் ராஜ்குமாரின் நெற்றியில் முத்தமிட்டு, கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார்.

அரசு மரியாதையுடன் அடக்கம்
முழு அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதிகாலை நடைபெற்ற புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட 10 லட்சம் ரசிகர்கள் கலந்து கொண்டு, கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. புனித் ராஜ்குமார் மரணமடைந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவரது தீவிர ரசிகர்கள் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

உருகும் நடிகர்கள்
புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவர் படிப்பு செலவிற்காக நிதி உதவி அளித்து வந்த 1800 மாணவர்களின் கல்விக்கு தான் உதவி செய்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன், அவர் தன்னை பார்க்க விரும்பியதாகவும், இப்படி ஆகும் என நினைக்கவில்லை என்றார்.

கடைசி நிமிடங்கள்
இந்நிலையில் புனித் ராஜ்குமார் கடைசியாக நெஞ்சுவலி வந்து மருத்துவமனைக்கு செல்லும் அவரது கடைசி நிமிட பரபரப்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வெளியில் இருந்த சிலர் அவசரமாக உள்ளே ஓடுகிறார்கள். அப்போது ப்ளூ டிஷர்ட், பிளாக் பேண்ட் அணிந்து மிக சாதாரணமாக நடந்து வந்து காரில் ஏறுகிறார் புனித் ராஜ்குமார். சுற்றி இருந்த சிலர் அவரது காரில் அவசரமாக ஏறுகிறார்கள். செக்யூரிட்டிகளும் பரபரப்பாக கேட்டை திறந்து விடுகிறார்கள். வெள்ளை நிற கார் அவசரமாக வெளியில் புறப்பட்டு செல்கிறது.

லீக்கான சிசிடிவி வீடியோ
புனித் ராஜ்குமார் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்த ஜிம் வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. புனித் ராஜ்குமாரின் இந்த கடைசி நிமிட வீடியோவை பார்த்து அவரது ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











