»   »  ரஜினியை கவருமா வேட்டையன்

ரஜினியை கவருமா வேட்டையன்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் பி.வாசு கூறியுள்ளார்.

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைந்த படம் சந்திரமுகி. தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரே தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் சமீபத்தில் படைத்தது சந்திரமுகி.

இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் சில நிமிடங்களே தோன்றிய வேட்டையன் கதாபாத்திரத்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளார்.

சந்திரமுகியில் முதலில் வேட்டையன் கதாபாத்திரத்தை விரிவாக வைத்திருந்தனர். ஆனால் இந்த கேரக்டரை பெரிதாக வைத்தால், சந்திரமுகி கேரக்டர் அடிபட்டு விடும் என்பதால் வேட்டையன் கேரக்டரை சுருக்கி விடுமாறு பி.வாசுவிடம் கேட்டுக் கொண்டார் ரஜினி. இதையடுத்து வேட்டையன் கேரக்டர் சுருக்கப்பட்டு, ஜோதிகாவின் பாத்திரத்திற்கு வலு கூட்டப்பட்டது.

இந்த நிலையில், வேட்டையன் கேரக்டரை மையமாக்கி புதிய படம் ஒன்றை ரஜினியுடன் சேர்ந்து செய்ய பி.வாசு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பி.வாசு கூறுகையில், வேட்டையன் படத்தை ரஜினி சாருடன் இணைந்து பண்ண நடிகர் பிரபு ஆர்வமாக இருக்கிறார். வேட்டைன் என்ற பெயரையும் அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.

ரஜினி சாரிடம் சமீபத்தில் வேட்டையன் படம் குறித்துப் பேசினேன். படத்தின் ஒரு வரிக் கதையை அவரிடம் கூறினேன். மிகவும் ஆர்வத்துடன் அதை அவர் கேட்டார்.

ரஜினி நடிக்க சம்மதித்தால் உடனடியாக படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கி விடலாம். எல்லாம் நல்லபடியாக போனால் விரைவில் வேட்டையன் குறித்த அறிவிப்பு வெளியாகும், படப்பிடிப்பும் உடனடியாக தொடங்கும்.

இந்தப் படம் சந்திரமுகியின் தொடர்ச்சியாக இருக்காது. வேட்டையன் கதாபாத்திரத்தின் விரிவாகவே அமையும். ஆக்ஷனும், காதலும் கலந்த கலவையாக இது இருக்கும் என்றார் வாசு.

வாசுவின் வேட்டையன், ரஜினியைக் கவருவானா? பொறுத்திருந்து பார்ப்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil