»   »  எப்பப்பா வரும் சிவாஜி?

எப்பப்பா வரும் சிவாஜி?

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகாதாம். ஏப்ரல் மாதக் கடைசிக்கோ அல்லது மே மாதத்திலோதான் படம் ரிலீஸாகும் என புது வதந்தி கிளம்பியுள்ளது.

சிவாஜி படம் தொடர்பாக நல்ல செய்தி வருதோ இல்லையோ, வதந்திகள் வரிசை கட்டி அலைபாய்ந்தவண்ணம் உள்ளன. முதலில் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஷூட்டிங் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பின்னர் படத்தின் டிவிடி வெளியாகி விட்டதாக டுமீல் செய்தி வந்தது. லேட்டஸ்டாக, சிவாஜி படத்தின் 3 பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி சிவாஜி யூனிட்டுக்கு டென்ஷனைக் கூட்டியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று புதுசாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது. படத்தை ஏப்ரல் 12ம் தேதிக்கு ரிலீஸ் செய்ய ஏவி.எம். நிறுவனம் முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது அது ஏப்ரல் கடைசிக்கோ அல்லது மே மாதத் தொடக்கத்திற்கோ தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.

படம் முழுக்க முடிந்து விட்ட நிலையில், ரஜினியை வைத்து சில நகாசு வேலைகளை செய்ய விரும்பினார் ஷங்கர். ரஜினியிடம் அதை சொல்ல அவரும் சரி என்றார். இதையடுத்து ஏவி.எம். ஸ்டுடியோவில் அக்காட்சிகளை ஷூட் செய்து வந்தார். இந்த வேலை இன்று பிற்பகல் தான் முடிந்தது.

இதுதவிர படத்தின் சில காட்சிகளில் மாற்றம் செய்ய ஷங்கர் விரும்புகிறாராம். அதாவது தெலுங்கிலும் இப்படம் வரவுள்ளால் அதற்கேற்ப காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய விரும்புகிறாராம்.

இதுகுறித்து ஷங்கர் தரப்பைச் சேர்ந்த ஒருவரிடம் நாம் பேசியபோது, கிராபிக்ஸ் வேலைகள் (அதாவது ரஜினி பறந்து பறந்து அடிப்பது, அந்தரத்தில் ஜின்ஜினாக்கிடியாக டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிள்) இன்னும் முடியவில்லை. அதை முடிக்க இன்னும் 2 வாரமாகும்.

ரஜினி சாரை வைத்து நான்கு விதமான கெட்டப்களில் சில சீன்களை எடுத்துள்ளோம். இப்படி பல காரியங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வது சந்தேகம்தான். அனேகமாக சொன்ன தேதியை விட சில வாரம் தள்ளிப் போகும் என்றார் அவர்.

ஆனால் ஆடியோ திட்டமிட்டபடி ஏப்ரல் 4ம் தேதி ரிலீஸாகி விடுமாம். பட ரிலீஸ் தள்ளிப் போவது குறித்து ஏவி.எம். தரப்பில் கேட்டால், அட சிவாஜி பட வதந்திகளில் இதுவும் ஒன்று சார், ஆள விடுங்க என்று ஓடுகிறார்கள்.

வா, வா சிவாஜி, சீக்கிரம் வா சிவாஜி!

Please Wait while comments are loading...