»   »  ரஜினியின் அடுத்த பட நாயகி யார்?

ரஜினியின் அடுத்த பட நாயகி யார்?

Subscribe to Oneindia Tamil
Rajini
ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள இரு படங்களில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நாயகி யார் என்ற கேள்வி திரையுலகிலும், முன்னணி ஹீரோயின்கள் மத்தியிலும் படு வேகமாக அலசப்பட்டு வருகிறது.

ரஜினி அடுத்து இரு படங்களில் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார். முதலில் பி.வாசுவின் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஹிட்டான கதபரயும்போல் படத்தின் ரீமேக்கில் சூப்பர் ஸ்டாராக நடிக்கவுள்ளார்.

இதை முடித்து விட்டு தனது மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகி வரும் சுல்தான் தி வாரியர் படத்தை முடித்துக் கொடுக்கவுள்ளார்.

அடுத்து மெகா பட்ஜெட் படமான ஷங்கரின் ரோபோட் படத்திற்குப் போகவுள்ளார்.

இதில் சுல்தான் தி வாரியர் படம் முழுமையான அனிமேஷன் படம். எனவே இதில் நாயகி குறித்த பிரச்சினை எதுவும் இல்லை.

அதே சமயம், வாசுவின் படம் மற்றும் ஷங்கரின் படத்தில் ரஜினியுடன் ஜோடி போடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஷங்கர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு இருப்பதாக சில முன்னணி நடிகைகளின் பெயர்கள் அலசப்படுகின்றன. நயனதாரா, தீபிகா படுகோன், திரிஷா, ஆசின் என பல பெயர்கள் அடிபடுகின்றன.

நயனதாரா, சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தவர். சிவாஜியில் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் ஆடியவர்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கக் கூடும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் திரிஷா. இதற்காக தனது கால்ஷீட்களை தளர்த்தி வைத்துக் கொண்டு காத்திருந்தார் திரிஷா. ஆனால் கடைசி வரை அழைப்பு வரவே இல்லை.

ஆசின் பெயரும் கூட அப்போது பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்கள் யாருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ரோபோட் படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த முறை நயனதாராவின் பெயர் பலமாக அடிபடுகிறது. அதேபோல, திரிஷா, ஆசின் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

கூடவே புதுப் பெயர் ஒன்றும் அடிபடுகிறது. அவர் தீபிகா படுகோன். கர்நாடகத்திலிருந்து கிளம்பிய இந்த அழகுப் புயல், பாலிவுட்டில் தற்போது மையம் கொண்டுள்ளது.

ஷாருக்கானுடன் அவர் ஜோடி சேர்ந்த ஓம் சாந்தி ஓம் மூலம் பெரும் கவனிப்புக்குள்ளாகியுள்ளார் தீபிகா. பாலிவுட்டில் தீபிகாவின் கவர்ச்சிக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் ஒரே படத்தில் பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நாயகிகள் வரிசையில் சேர்ந்துள்ளார் தீபிகா.

இவரைத்தான் ஷங்கர் தனது படத்தின் நாயகியாக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு பேச்சு உலவுகிறது.

சுஜாதாவின் கதையான என் இனிய இயந்திரா மற்றும் அதைத் தொடர்ந்து எழுதிய மீண்டும் ஜீனோ ஆகிய கதைகள்தான் இப்போது ரோபோட் படமாக உருவாகவுள்ளது. இந்தக் கதையில் ஒரே ஒரு நாயகிதான். அந்த நாயகியின் பெயர் நிலா. ஆனால் ரோபோட்டுக்கு 2 நாயகிகள் வேண்டும் என்று ஷங்கர் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அதை சுஜாதாவும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

மேலும், சுஜாதாவின் ரோபோட் ஆக ஒரு நாய் இருந்தது. அதையும் ஷங்கரின் கோரிக்கைக்கேற்ப மாற்ற உள்ளாராம் சுஜாதா. இதுதொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன. ரஜினிக்கேற்ப ஒரிஜினல் கதையில் இதுபோல சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரோபோட் படத்திற்கு இசையமைக்கவிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். கேமராவுக்கு நீரவ் ஷா என முடிவாகியுள்ளது. அதேசமயம், பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஒளிப்பதிவாளரான மணிகண்டன் புக் செய்யப்படலாம் என்ற பேச்சும் நிலவுகிறது. ஓம் சாந்தி ஓமுக்கு ஒளி கொடுத்தவர் மணிகண்டன்தான்.

சிவாஜி படத்தின் கலை இயக்குநராக தோட்டா தரணி செயல்பட்டார். ரோபோட்டில், சாபு சிரில் பணியாற்றவுள்ளார்.

இப்படி பல வதந்திகள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டுள்ளன.

இன்னொரு குரூப்போ, ரோபோட் என்பது தமிழ்ப் பெயரா, ஆங்கிலப் பெயரா? வரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா? என்ற 'முக்கிய' டிஸ்கஷனில் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil