»   »  சல்மான் கான் ஜோடி ஆசின்...

சல்மான் கான் ஜோடி ஆசின்...

Subscribe to Oneindia Tamil

விஜய், ஆசின் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன போக்கிரி, இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் சல்மான்கானுடன் ஜோடி போட்டு அசத்தவுள்ளார் ஆசின்.

தமிழையும், தெலுங்கையும் ஒரு கலக்கு கலக்கி ஓய்ந்துள்ள ஆசின் இப்போது இந்திக்கு இடம் பெயருகிறார். இதற்காக மும்பைக்கு நிரந்தரமாக இடம் பெயர முடிவு செய்துள்ளார் ஆசின். மும்பையில் வீடும் பார்த்து குடி புகுந்தும் விட்டார் (இதை நாம்தான் முன்பே சொல்லியிருந்தோம், முதலில் சொல்லியிருந்தோம்).

அந்தேரி மேற்கு பகுதியில்தான் ஆசினின் புதிய வாடகை வீடு அமைந்துள்ளது. ஆனால் ஜூஹு பகுதியில் (அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெத்த பெத்த ஆசாமிகள் எல்லாம் இங்குதான் ஆப்படித்து அமர்ந்திருக்கிறார்கள்) சூப்பராக ஒரு வீட்டை வாங்கவே ஆசின் விரும்புகிறாராம். விரைவில் வாங்கியும் விடுவார் என்கிறார்கள்.

இனிமேல் முழுக் கவனத்தையும் இந்திப் பக்கம் திருப்பப் போகிறாராம் ஆசின். இதனால் தமிழில் விஜய்யுடன் மறுபடியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

ஆசின் இந்தியில் செய்யப் போகும் முதல் படம் கஜினி. ஆமிர்கானுடன் இதில் ஜோடி போடுகிறார். பிரம்மப் பிரயத்தனம் செய்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளதால், மிகவும் கவனத்துடன் இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஆசின்.

இந்த நிலையில், இன்னொரு சூப்பர் வாய்ப்பும் ஆசினைத் தேடி வந்துள்ளதாம். அதாவது போக்கிரி இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் விஜய் வேடத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார். இதிலும் ஆசினை ஜோடியாக போட முடிவு செய்துள்ளார்களாம்.

படத்தைத் தயாரிக்கப் போவது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். தமிழ் போக்கிரியில் செய்த ரோலிலேயே இந்தியிலும் அசத்தப் போகிறாராம் ஆசின்.

இதுதவிர ரங்தே பசந்தி புகழ் ராகேஷ் மெஹ்ரா புதிதாக தயாரிக்கவுள்ள டில்லி-6 என்ற படத்திலும் ஆசின் நடிக்கவுள்ளார். இன்னும் சில படங்கள் குறித்தும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறதாம்.

தற்போதைக்கு தமிழில் ஆசின் நடித்து வரும் ஒரே படம் தசாவதாரம்தான். அதிலும் கூட அவ்வப்போது டேக்கா கொடுத்து விட்டு மும்பைக்கு ஓடி விடுகிறாராம் ஆசின்.

பாலிவுட் என்ட்ரி குறித்து ஆசினிடம் கேட்டபோது, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை சேட்டா. முருகதாஸுக்கும், ஆமிர்கானுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தியில் சில படங்கள் வந்துள்ளது உண்மைதான். இப்போதைக்கு கஜினியைத் தவிர சல்மான் கானுடன் ஒரு படத்திலும், ராகேஷ் மெஹ்ராவுன் ஒரு படத்திலும் புக் ஆகியுள்ளேன்.

பாலிவுட்டில் தீவிரமாவதால் தமிழை மறந்து விடுவேன் என்று நினைத்து விடாதீர்கள். நிச்சயம் தமிழிலும் நடிப்பேன். தமிழை மறக்க மாட்டேன்.

தசாவதாரம் ரிலீஸான பின்னர்தான் அடுத்த தமிழ்ப் படம் குறித்து முடிவு செய்யவுள்ளேன். அதுவரை இந்தியில் கவனம் செலுத்தப் போகிறேன் என்றார் ஆசின்.

பாலிவுட்டில் நல்லா பிசின் போட்டு உக்காந்துடுங்கோ ஆசின்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil