»   »  இந்திக்குப் போகும் சதா!

இந்திக்குப் போகும் சதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த இயக்குநர் ஜீவாவின் கைவண்ணத்தில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற உன்னாலே உன்னாலே இந்திக்குப் போகிறது. அதே சதா, அதே தனிஷா இந்தியிலும் நடிக்கவுள்ளனர். ஹீரோ மட்டும் முத்த நாயகன் இம்ரான் ஹஷ்மியாம்.

மறைந்த ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஜீவாவின் உருவாக்கத்தில் வெளியான உன்னாலே உன்னாலே வெற்றியைத் தொட்ட படம். அடுத்த படமான தாம் தூமையும் வெற்றிப் படமாக்க ஆர்வமாக இருந்த நிலையில்தான் எதிர்பாராதவிதமாக இறந்தார் ஜீவா.

இந்த நிலையில் உன்னாலே உன்னாலே தற்போது இந்திக்குப் போகிறது. சதா அதே கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் நடித்த கஜோல் தங்கச்சி தனிஷாவும் அதே ரோலில் நடிக்கவுள்ளாராம். ஹீரோவாக நடிப்பவர் இந்தி இளம் நாயகன் இம்ரான் ஹஷ்மி.

இவருக்கு ஒரு சிறப்பு உண்டு. இவருடன் நடிக்கும் நாயகிகளின் உதடுகளை புண்ணாக்காமல் விட மாட்டார் இம்ரான். அதாவது மவுத் டூ மவுத் கிஸ்ஸிங் காட்சி கண்டிப்பாக இம்ரான் படத்தில் இருக்கும். ஒவ்வொரு நாளும் பல் விளக்குவது போல, ஒவ்வொரு படத்திலும் நாயகிக்கு கிஸ்ஸடிப்பது இம்ரானின் கடமை.

இந்தி ரசிகைகளின் நெஞ்சங்களில் திரண திரண என தில்லானா பாடிக் கொண்டிருக்கிறார் இம்ரான். இப்போது தமிழ் ரீமேக்கான உன்னாலே உன்னாலே படத்தின் நாயகனாகியுள்ளார். சதா தப்பிப்பாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

சமீப காலத்தில் தமிழிலிருந்து இந்திக்குப் போகும் 3வது நாயகி என்ற பெருமையைப் பெறுகிறார் சதா. இவருக்கு முன்பா ஷ்ரியாவும், ஆசினும் இந்திக்குப் போய் விட்டனர். அந்த வரிசையில் இப்போது சதாவும் சேருகிறார்.

ஷ்ரியா நடித்த ஆவாராபன் படு ஹிட் ஆகியுள்ளது. ஆசின் நடித்துக் கொண்டிருக்கும் கஜினி, அலை எழுப்ப காத்துக் கொண்டுள்ளது.

சதா தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார். உன்னாலே உன்னாலே இந்திப் பதிப்பின் கதை விவாதத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது தமிழில் சதாவிடம் லீலை படம் மட்டுமே உள்ளது. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர மலையாளத்தில் ஜெயராமுடன் நாவல் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உன்னாலே உன்னாலே வெற்றி பெற்றாலும் கூட சதாவின் நெற்றியில் எழுதப்பட்டதில் பெரிய அளவில் மாற்றம் வந்து விடவில்லை என்பது அவரது கையில் இருக்கும் சொற்ப படங்களைப் பார்த்தாலே தெரிகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil