விஜய் படத்தில் சர்ச்சை ரோலில் சாய் பல்லவி... இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா டாக்டர்!
ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி நடிப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என தனக்கென ஒரு தனி ரசிகர்வட்டத்தை வைத்திருப்பவர் சாய் பல்லவி. இவர் தனுஷுடன் நடித்த மாரி 2 படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாய் பல்லவி தமிழில் முதலில் நடித்த படம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரு. இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ஏ.எல்.விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற பேச்சு வெகுநாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சசிகலா வேடத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.
இந்த படத்தை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து, அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் தான் இடம்பெறும் என தெரிகிறது. இதில் சசிகலா கதாபாத்திரத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது.
எனவே சசிகலாவாக சாய் பல்லவி நடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும், இப்ப எதுக்கு இந்த ரிஸ்க் எடுக்குறீங்க டாக்டர் சாய் பல்லவி என அவரது ரசிகர்கள் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











