விருமாண்டி வில் ஸ்மித்.. கிறிஸ் ராக் மட்டுமல்ல இவ்வளவு பேரை அடிச்சிருக்காரா இந்த பேட் பாய்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மனைவி பற்றி தவறாக பேசக் கூடாது. பாடி ஷேமிங் பண்றது பெயர் காமெடி கிடையாது. உடல் நலக் குறைவால் அவதி படுபவரை கிண்டலாக பேசினால் முகத்து மேல் குத்து விழும் என ஒரே குத்தில் உலகிற்கே பாடம் நடத்தி உள்ளார் வில் ஸ்மித்.
ஆஸ்கர் 2022ல் முதல் முறையாக வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் என்கிற செய்தியை விட தீயாய் பரவியது அவர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி குத்து விட்ட சம்பவம் தான்.
இந்நிலையில், கிறிஸ் ராக்கிற்கு முன்னதாகவும் பொதுவெளியில் சிலரை கோபத்துடன் வில் ஸ்மித் தாக்கி உள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை கொடுக்கின்றன. பேட் பாய்ஸ் ஹீரோ கோவக்கார விருமாண்டியாக இருக்கிறாரே என ஹாலிவுட் தொடங்கி உள்ளூர் வரை வில் ஸ்மித் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.

ஆக்ஷன் ஹீரோ
ஹாலிவுட்டில் பேட் பாய்ஸ், மென் இன் பிளாக், வைல்ட் வைல்ட் வெஸ்ட், அலி என ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் வில் ஸ்மித். ஹாலிவுட் படங்களில் எதிரிகளை பந்தாடுவது போல நிஜ வாழ்க்கையிலும் கை நீட்டுவது இவருக்கு கை வந்த கலை என்கின்றனர். ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் கொடுத்த அந்த அடிக்கு பாராட்டுக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மனைவியை பத்தி தப்பா பேசினா
வில் ஸ்மித்தின் இரண்டாவது மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் Alopecia எனும் நோயால் பாதிக்கப்பட்டு தலைமுடி இல்லாமல் மொட்டை தலையுடன் இருப்பதை பார்த்த காமெடி நடிகர் கிறிஸ் ராக் டெமி மூரின் ஜிஐ ஜேன் 2 படத்தில் ஜடாவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என கிண்டலாக கிறிஸ் ராக் பேசியதும் மேடை ஏறிய வில் ஸ்மித் அவரை அடித்தது உலகளவில் டிரெண்டாகி விட்டது. மனைவி பற்றி எவனாவது தப்பா பேசினால் இதுதான் தண்டனை என மீம்கள் பறக்கின்றன.

மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்
வில் ஸ்மித் அடித்து விட்டு இறங்கிய பின்னரும் சிரித்துக் கொண்டே கிறிஸ் ராக் பேச, உன் வாயில் இனிமேல் என் மனைவியின் பெயர் வரக் கூடாது என கெட்ட வார்த்தை போட்டு திட்டுவார். பின்னர், சிறந்த நடிகருக்கான விருது அறிவித்த நிலையில், தனது செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பும் கேட்டு விட்டார்.

விருமாண்டி வில் ஸ்மித்
கிறிஸ் ராக் முதல் நபர் இல்லை என்றும் ஏற்கனவே இருவர் இது போல வில் ஸ்மித்திடம் பொதுவெளியில் அடி வாங்கி இருக்காங்க என்றும் கோபத்தை வில் ஸ்மித்துக்கு கட்டுப்படுத்த தெரியாது என்றும் ஏகப்பட்ட விமர்சனங்களும் முந்தைய வில் ஸ்மித்தின் அடிதடி வரலாற்றையும் நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

முத்தம் கொடுக்க வந்தவருக்கு அறை
உக்ரைன் நாட்டை சேர்ந்த பிராங்ஸ்டர் விட்டாலி செட்யூக் (Vitalii Sediuk) கடந்த 2012ம் ஆண்டு மென் இன் பிளாக் 3ம் பாகத்தின் ப்ரீமியர் காட்சிக்காக வில் ஸ்மித் வந்திருந்த போது அத்துமீறி அவர் அருகே வந்து வில் ஸ்மித்துக்கு உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சிக்க முதலில் தள்ளி விட்ட வில் ஸ்மித், மீண்டும் மீண்டும் அவர் முயற்சிக்க கடுப்பாகி முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ, கிம் கர்தாஷியன் உள்ளிட்ட பல பிரபலங்களிடமும் அந்த பிராங்ஸ்டர் இது போல அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்வெல் நடிகருக்கு குத்து
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மார்வெல் படத்தில் நடித்துள்ள நடிகர் அந்தோணி மேக்கி என்பவருக்கும் இவருக்கும் இடையே நடந்த சின்ன மிஸ் கம்யூனிகேஷன் காரணமாக வில் ஸ்மித் அவரது தாடையில் ஓங்கி ஒரு குத்து விட்டுள்ளாராம். இப்படி அடிக்கடி வில் ஸ்மித் அடிப்பதும் மற்றவர்கள் அடி வாங்குவதும் ஹாலிவுட்டில் தொடர் கதையாகவே நடந்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











