»   »  நானும் ஒரு மலையாளி-கமல்

நானும் ஒரு மலையாளி-கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kamal

கே.பாலச்சந்தருக்கு முன்பே எனக்கு ஒரு பெரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது மலையாளத் திரையுலகம் என்பதால் நானும் ஒரு மலையாளி என்று கூறிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நூறு ஏழைக் குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக உலக மலையாளிகள் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பத்திரிகையாளர் கூட்டத்தில் பங்கேற்ற கமலிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்:

தசாவதாரம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னமும் உறுதியாக எந்த தகவலும் இல்லையே...?

என்னடா இது, இன்னும் தசாவதாரம் பற்றிக் கேட்கவில்லையே என்று பார்த்தேன். இந்த இரண்டு ஆண்டுகளாக நான் போகும் இடமெல்லாம் கேட்கப்படுகிற முதல் கேள்வி தசாவதாரம் பற்றித்தான். இதுகுறித்து சமீபத்தில் கூட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். எப்படியும் ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று அவர் சொன்னதையே இங்கு நானும் சொல்ல விரும்புகிறேன்.

வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. உங்களைப் போலவே நானும் படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தசாவதாரம் உண்மையிலேயே மிகப் பிரமாண்டமான படம். இந்தப் படத்துக்கு உழைத்ததைப் போல வேறு எந்தப் படத்துக்காகவும் நான் கடுமையாக பாடுபட்டது கிடையாது. அதற்கான பலன் நிச்சயம் இப்படத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் கிடைக்கும்.

தசாவதாரம் படத்தின் இசை உங்களுக்குத் திருப்தியாக வந்துள்ளதா?

ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்... உண்மையிலேயே மிகச் சிறப்பாக வந்துள்ளன படத்தின் பாடல்கள். வட இந்திய இளைஞரான ஹிமேஷ் ரேஷம்மியா, தமிழகத்தின் கலாசாரத்தை உணர்ந்து, அதுவும் 12-ம் நூற்றாண்டிலிருந்த தமிழ் இசையைப் புரிந்து இசையமைப்பது எத்தனை பெரிய விஷயம்! அதைச் சாதித்திருக்கிறார் அந்த இளைஞர்.

இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கிசானை அழைத்து வருவதாகக் கூறப்படுகிறதே?

அப்படியா... தயாரிப்பாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டுதான் இதற்கான பதிலை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். வேண்டுமானால் நீங்களும் ஜாக்கி சான் வருவதாக செய்தி போட்டுக் கொள்ளுங்கள்!

உங்கள் அடுத்த படம் மர்மயோகி குறித்து இப்போதே பெரிய அளவில் பேச்சு எழுந்துள்ளதே... அதன் பட்ஜெட் 110 கோடி என்றும் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறித்து..

கேட்கவே சந்தோஷமா இருக்கு... இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி 110 கோடி என்றெல்லாம் எழுதப்பட்டு வருவதை நானும் படித்து வருகிறேன். விடுங்க, எழுதட்டும். நல்லதுதான். பட்ஜெட் ஏற ஏற எனக்குத்தான் சந்தோஷம். மர்மயோகியை வால்ட் டிஸ்னியுடன் இணைந்து தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே மேற்கொண்டு அதைப் பற்றி இப்போது விவாதிக்கும் நிலையில் நான் இல்லை.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உங்கள் படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்காதா?

அட எனக்கே கூட அது ஏமாற்றமாத்தான் இருக்கு. ஆனால் ஒரு மிகச்சிறந்த படைப்பைக் காண இத்தனை நாட்கள் காத்திருப்பதில் தவறில்லை. ரசிகர்களுக்கு அது புரியும் என்று நம்புகிறேன். வெறும் எண்ணிக்கை சார்ந்து இனி என் திரைப் பயணம் இருக்காது. அதில் அர்த்தமும் இல்லை.

உலக மலையாளிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...

நானும் ஒரு மலையாளிதாங்க.... ஒரு நேரத்தில், கே.பாலச்சந்தரால் எனக்கு தமிழில் பெரிய அறிமுகம் கிடைப்பதற்கு முன்பே என்னை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல், என்னையும் தங்களில் ஒருவனாகவே அரவணைத்துக் கொண்டது மலையாள திரையுலகம்தான்.

இதுவரை நான் மலையாளத்தில் சில படங்கள்தான் செய்திருக்கிறேன். ஆனால் கேரள மக்கள் அதையே பெரிய விஷயமாகக் கருதி என்மீது அன்பு காட்டி வருகிறார்கள். தமிழகத்தைப் போலவே, என்னால் உரிமையோடு எதையும் பேசக்கூடிய, செய்யக்கூடிய மாநிலம் கேரளாதான். அதை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன். அந்த வகையில் நானும் ஒரு மலையாளிதான்.

எனவே உலக மலையாளிகள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த நல்ல நிகழ்வில் என்னையும் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன நல்ல முயற்சிகளை, உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

மலையாளத்தில் மீண்டும் நடிப்பீர்களா?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்! இப்போது அதுகுறித்துதான் தீவிரமாகப் பேசி வருகிறோம். எனது அடுத்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நேரடியாகத் தயாராகும் இருமொழிப் படமாக அமையும் என்றார் கமல்.

பொதுவாகவே கமலுக்கு 'மீடியா டார்லிங்' என்று செல்லப் பெயர் உண்டு. யார் என்ன கேட்டாலும் சலிக்காமல் பதில் செல்வார். கோபத்தில் யாருடைய மனமும் புண்படும்படி பேசவும் மாட்டார். ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தசாவதாரம் குறித்து எங்கேயும் பெரிதாகப் பேசியதில்லை கமல். இப்போதுதான் அந்தப் படம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

நேற்று அடர்ந்த தாடியுடன் காணப்பட்டார் கமல். இதுகுறித்து ஒரு நிருபர், இது மர்மயோகிக்கான புதிய தோற்றமா என்று கேட்டபோது, அப்படித்தான் வச்சுக்குங்களேன் என்றார் சிரித்தபடி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil