»   »  ரஜினியுடன் ஒப்பிடுவதா?- அமிதாப் வருத்தம்

ரஜினியுடன் ஒப்பிடுவதா?- அமிதாப் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

ஒரே துறையில், இரு திறமைசாலிகள் இருக்கக் கூடாதா?. ரஜினியையும், என்னையும் ஒப்பிட்டுப் பேசுவது வருத்தம் தருகிறது என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

சிவாஜி படம் ரிலீஸாவதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் அமிதாப் பச்சனை விட ரஜினிக்கே செல்வாக்கு அதிகம் என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், அமிதாப் இந்தியத் திரையுலகின் சக்கரவர்த்தி. அவருடன் என்னை ஒப்பிடுவது தவறு என்று கூறியிருந்தார். அதன் பின்னர் சிவாஜி படத்தை அமிதாப்புடன் சேர்ந்து மும்பையில் பார்த்தார் ரஜினி.

இந்த நிலையில், தன்னையும், ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

அவர் அளித்த பேட்டி:

இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி என்று ரஜினி கூறியுள்ளார். அது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

ஆனால் நான் சக்கரவர்த்தி அல்ல. எனக்கென்று ஒரு இடம் உள்ளது. அவருக்கென்று ஒரு இடம் உள்ளது. அப்படி இருக்கையில் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவது வருத்தம் தருகிறது. ஒரே துறையில் இரு திறமைசாலிகள் இருக்கக் கூடாதா. அப்படி இருப்பவர்களை நாம் ஏன் ஏற்க மறுக்கிறோம் என்று தெரியவில்லை என்றார் அமிதாப் பச்சன்.

இன்னும் ஏன் நடிப்பை விடாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் நிதி நெருக்கடி வந்து விடக் கூடாது என்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன். முன்பு அந்த நிலை எனக்கு வந்துள்ளது. அதை நான் அனுபவித்துள்ளேன்.

மீண்டும் அதுபோன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்.

அதுமட்டுமல்லாது என்னை வேண்டாம் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ரசிகர்களும் சொல்லும் வரை நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன்.

என்னை விட 20, 30 வயது குறைவான ஹீரோக்களுடன் போட்டி போடும் அளவுக்கு எனக்கு நடிப்பு வாய்ப்பும், படங்களும் வருவது சந்தோஷமாக இருக்கிறது என்றார் அமிதாப்.

மீண்டும் அரசியல்?

நான் ஒரு தோல்வி அடைந்த அரசியல்வாதி. அரசியலுக்கு நான் சரிப்பட்டு வரவில்லை. எனவே மறுபடியும் அரசியல் பக்கமே போகக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன் என்றார் அமிதாப்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil