twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு சுதந்திரம் இல்லேன்னா படமே எடுக்க மாட்டேன்! - பாலா

    By Staff
    |

    Bala in Naan Kadavul
    ஒரு படைப்பாளி என்ற முறையில் என்னுடைய சுதந்திரம் எனக்கு முக்கியம். அந்த சுதந்திரம் பாதிக்கும் விதத்தில் சூழ்நிலை அமைந்தால், படமே எடுக்காம கூட இருந்துடுவேன்!" என்கிறார் பாலா.

    தேசிய விருது பெற்ற பாலாவை திரையுலகமே கொண்டாடி வருகிறது. நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது:

    சிறந்த இயக்குநர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

    இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நான் பெரிய எதிர்பார்ப்போடு இல்லை. ஆனால் எனக்குத்தான் கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையோடு, மகனுக்காக ஜோஸியம் பார்க்கும் அம்மா மாதிரி சொன்னவர் அகிலாம்மா (பாலுமகேந்திரா மனைவி)... அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டோம் என்ற திருப்தி இருக்கு.

    இந்த விருது உங்களுக்கு தரப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    ஊனமுற்றோர் வாழ்க்கையை சித்தரித்திருந்தேன். அதற்கு கிடைத்ததுதான் இந்த விருது என்று நினைக்கிறேன்.

    விருதுக்கு காரணமானவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    வேறு என்ன சொல்ல...நன்றிதான்!

    இளையராஜா, ஆர்யா, பூஜாவுக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததே?

    அவர்களுக்கு விருது கிடைக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன். இனி மற்ற விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    நான் கடவுள் படத்தை ரீமேக் செய்வீர்களா?

    இந்த படத்தை ரீமேக் செய்ய முடியாது. இதுக்கு முதல் காரணம். ஆர்யா நடிப்பு. ஆர்யாவைவிட யார் அந்த கேரக்டரில் நடித்துவிட முடியும். இப்படி நான் கேட்பது பிற நடிகர்களை புண்படுத்தக் கூடும். ஆனால் வேறு என்ன சொல்வது...

    பிறமொழிப் படங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறீர்களா?

    பொதுவா நான் ஆங்கிலப் படங்கள் பார்க்கிறதில்லை... அப்படியே பார்த்தாலும் நான் இன்ஸ்பையர் ஆக அதில் ஒண்ணுமிருக்காது. அதைவிட இந்திய மொழிப் படங்களைத்தான் அதிகமா பார்க்கிறேன். இங்க இல்லாததா...

    சக் தே இந்தியா... இந்தப் படத்தை ரீமேக் செய்ய முடியுமா.. தமிழ்ல சுப்ரமணியபுரம், நாடோடிகள் எல்லாம் சாதாரணமா ஒதுக்கிவிடக் கூடிய படங்களா என்ன?

    நான் கடவுள் படத்துக்காக நீங்கள் சந்தித்த பிரச்சினைகள், வழக்குகள் குறித்து...

    அந்த படத்திலேயே நான் ஒரு வசனம் வச்சிருப்பேன். அது இப்போ பொருத்தமா இருக்கும். 'கண்டவனும் கேஸ் போட்டு பப்ளிசிட்டி தேடிக்கிறான்"ன்னு கோர்ட் சீன்ல ஒரு வசனம் இருக்கும். இதற்கு முன்னால் ஏற்பட்ட சில அனுபவங்களின் எரிச்சலில்தான் அந்த வசனத்தை வைத்தேன்.

    உங்களது அடுத்த படைப்பு என்ன?

    என் குருநாதர் பாலுமகேந்திரா சாரும், இளையராஜா சாரும் என் மீது மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார்கள். அந்த அக்கறையில் அவர்கள் எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லியிருக்கிறார்கள்.

    அதன்படி இனி வரும் என் படைப்புகள் மென்மையாகவே இருக்கும். காதலை நிறைய சொல்வேன். ஆனால் கூத்தடிக்கிற காதலை சொல்ல மாட்டேன்.

    பிதாமகன்லயே உங்களுக்கு சிறந்த விருது கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. மிக குறைந்த வாக்குகளில் உங்களுக்கு அது கிடைக்காமல் போனதாக சொன்னார்கள்...

    இருக்கலாம்... எப்பவும் நான்தான் பெரியவன்... என்னை விட்டா ஆளே இல்லன்னு சொல்றவன் வளர முடியாது. எப்போதும் மாணவனாகவே உணர்கிற வரையில்தான் கத்துக்க முடியும். பாலச்சந்தர் சார் ஒருமுறை சொன்னது இது. அதை அப்படியே பின்பற்றுகிறேன்.

    கமர்ஷியல் படங்கள் இயக்குவீர்களா?

    விசில் சத்தமும், கைத்தட்டலும் சினிமாவுக்கு தேவை. ஆனால் இவை இரண்டை மட்டுமே ஒரு சினிமா ஏற்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன். சினிமா நிறைய யோசிக்க வைக்கனும்.

    நிர்பந்தங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

    ஒரு படைப்பாளியா எனக்கு என் சுதந்திரம் முக்கியம். நிர்பந்தம் உதவாது. எனக்கு சுதந்திரம் இல்லேன்னா அந்தப் படத்தையே நான் எடுக்க மாட்டேன்...

    இளைய இயக்குநர்களுக்கு என்ன சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    நானே இளைய இயக்குநர்தாங்க. விருது பெற்ற நான் கடவுளை பாருங்கள். இன்னும் கத்துக்கங்க...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X