»   »  போலீஸ் என்கவுண்டர்- பாபிலோனா புகார்!

போலீஸ் என்கவுண்டர்- பாபிலோனா புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது தம்பி விக்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்து என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுவோம், உனது வாட்டர் சர்வீஸை முடக்கி விடுவோம் என்று போலீஸார் மிரட்டுவதாக நடிகை பாபிலோனா கூறியுள்ளார்.

பாபிலோனாவின் சித்தி முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா. இவரது மகன் விக்கி. மாயா, விக்கி மீது சரமாரியாக புகார்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ரகளை செய்வது உள்பட பல புகார்கள் இருவர் மீதும் உள்ளன. ஒருமுறை இருவரும் கைதாகி சிறைக்கும் போயுள்ளனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், விக்கி, தனது நண்பர்களோடு குடித்து விட்டு கே.கே.நகர் பக்கம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்டு வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி விக்கியைப் பிடிக்க முயன்றபோது நெஞ்சில் கை வைத்துத் தாக்கித் தள்ளி விட்டு ஓடி விட்டார்.

இதுகுறித்த அறிந்த பாபிலோனா முதல்வர் கருணாநிதியிடம் புகார் கொடுப்பதற்காக அவரது வீட்டுக்கு தனது பாட்டியுடன் போனார். ஆனால் அவரை உள்ளே விடாத காவலர்கள் முதல்வர் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில் போலீஸார் தன்னை பலவாறாக மிரட்டுவதாக கூறி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று பாபிலோனா புகார் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 8ம் தேதி மதியம் 3 மணியளவில் எனது தம்பி விக்கி, கே.கே.நகர் சாமி ஒயின்ஸ் கடை அருகில் உள்ள கடைக்கு ஸ்னாக்ஸ் வாங்கச் சென்றார்.

அப்போது ஒயின் ஷாப்பில் ஏதோ சண்டை நடந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்

அந்த சமயத்தில் விக்கியையும் போலீஸார் அடித்து விட்டனர். வலி தாங்க முடியாமல்தான் விக்கி அங்கிருந்து ஓடியுள்ளார். இந்த நிலையில் வட பழனியில் நடந்த பழைய சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு பெண் சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி விக்கி மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

தப்பி ஓடிய விக்கி என்ன ஆனார் என்று தெரியவில்லை. பின்னர் இரவு எங்களது வீட்டுக்கு 10 போலீஸார் திமுதிமுவென வந்தனர். எனது வீட்டில் இருந்த பணியாளர் ஒருவரை அடித்தனர். பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த, எனக்குச் சொந்தமான மினி வாட்டர் லாரியின் டயர்களை பஞ்சராக்கி விட்டனர்.

பிறகு என்னிடம் வந்து, இனிமேல் வாட்டர் பிசினஸே செய்ய விடாமல் முடக்கி விடுவோம் என்று மிரட்டினர். பிறகு, ஊழியர் வினோத் என்பவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இன்னொரு மினி லாரியையும் எடுத்துச் சென்று விட்டனர்.

அங்கு என்னிடம் போலீஸார் முரட்டுத்தனமாக பேசினர். உனது தம்பியை குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுவோம் என்று மிரட்டினர்.

காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்பதால்தான் முதல்வர் வீட்டுக்குப் போனோம். முதல்வர் அப்போது அங்கு இல்லை. அங்கிருந்த மடிப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னிடம் ஆறுதலாக பேசினார்.

அவரே கே.கே.நகர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து, எதற்காக பாபிலோனா வீட்டுக்குப் போனீர்கள், எதற்காக லாரியை கொண்டு சென்றீர்கள், எதற்காக மிரட்டினீர்கள் என்று கேட்டார். வினோத்தையும், லாரியையும் விடுவிக்குமாறும் அவர் கூறினார்.

பின்னர் நான் காவல் நிலையம் சென்றேன். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் என்னிடம், பெரிய ஆட்களைப் போய்ப் பார்த்தால் நாங்கள் பயந்துடுவோமா என்று மிரட்டினார்.

விக்கி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை தெய்வநாயகி உயிர் போகும் அளவுக்கு அடித்ததாக நடந்ததை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் என்றார்.

கருப்பு நிற சேலையில் படு கவர்ச்சியாக காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்த பாபிலோனாவைப் பார்க்க பெரும் கூட்டம் திரண்டு விட்டது. புகார் கொடுக்க வந்த பலரும் பாபிலோனாவைப் பார்த்து ரசிக்க முண்டியடித்தனர். இதில் போலீஸார் பலரும் அடக்கம் என்பதுதான் விசேஷம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil