For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சந்திப்போமா?

  By Staff
  |

  15 வருடங்களில் 15,000-க்கும் மேற்பட்ட பாடல்கள். தாய் மொழியான மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒரியா, பெங்காலி, ஹிந்தி என பட்டியல் நீள்கிறது. கேட்கும் போதே கிறு கிறுக்க வைக்கும் ரம்யமான குரல். செளக்யமான பாவத்தில் நம்மை சிலாகிக்க வைக்கும் அந்தக் குயில் குரலுக்குச் சொந்தக்காரர் சித்ரா என்பதை சொல்ல வேண்டியதில்லை.

  தென்னிந்திய திரையுலகில் இன்று அதிகம் விரும்பப்படும் குரலாக "சின்னக்குயில் சித்ராவின் குரல் உள்ளது. கேரள மாநில அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கானவிருதை 12 முறை சித்ரா வென்றுள்ளார். ஐந்து முறை தேசிய விருதுக்குச் சொந்தக்காரராகியுள்ளர். இதுதவிர, பிற மாநில விருதுகளும் கை கொள்ளும் அளவில் உள்ளது. இத்தனை பெற்றும் அதன் கணம் தலைக்கு ஏறாமல் உள்ளார் சித்ரா.

  தனது வெற்றி குறித்து சித்ரா கூறுகையில், இதெல்லாம் நான் எதிர்பாராதது. ஆஷாஜி (ஆஷாபோன்ஸ்லே), ஜானகியம்மா (எஸ்.ஜானகி) ஆகியோர் போல பிரபல பாடகியாக வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசையாக இருந்தது. இன்னும் கூட நான் போக வேண்டிய பாதை பெரிதாக இருப்பதாகவே உணர்கிறேன். இப்போது கிடைத்துள்ள விருதுகள் மூலம் அதிக பொறுப்பு எனக்கு ஏற்பட்டுள்ளாகவே உணர்கிறேன்.

  இப்போதெல்லாம் ஒரு பாடலைப் பதிவு செய்யும்போது எனக்குத் திருப்தி வராவிட்டால் மீண்டும் ஒருமுறை பதிவு செய்யுமாறு இசையமைப்பாளர்களை கேட்டுக் கொள்கிறேன். தவறு வந்து விடக் கூடாது என்ற பயமே இதற்குக் காரணம் என்கிறார்.

  பாட வரும் முன் சித்ரா ஒரு ஆசிரியையாக இருந்தார். எனது சொந்த ஊரான திருவனந்தபுரம் அருகே ஒரு பள்ளியில். அப்போது இசையும் கற்றுக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் 1982-ல் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. "நிஜன் ஏகனன்னு என்ற படத்தில் வரும் "ராஜானி பரயூ என்பதே நான் பாடிய முதல் பாடல். அப்பாடல் ஹிட் ஆனது. அதன் பிறகு எனது வாழ்க்கையே மாறி விட்டது. இசையில் பட்டம் பெற்ர பின் எனது வேலையை விட்டேன். முழு நேர பாடகியாகி விட்டேன்.

  பாடகியான பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். தென்னிந்திய மொழிகள்ை கற்ற் கொண்டேன். பாடுவது முழுமையான தொழிலாக தழுவிக் கொண்டேன் என்கிறார் சித்ரா.

  சித்ரா பாட வந்தபோது எக்கச்சக்க விமர்சனம். இதுகுறித்து சித்ரா கருத்துக் கூறுகையில், எனது உச்சரிப்பு ஆங்கிலம் கலந்ததாக இருந்ததாக பலர் குறை கூறினர். பாடல்களில் தெளிவில்லை என்றும் பலர் கூறினர். எனது குரல் காரணமாக இப்படித் தோன்றியதாகவே நான் இந்த விமர்சனங்களை எடுத்துக் கொண்டேன். எந்தப் பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், மொழி புரியாமல் நான் பாடியதில்லை.

  பெண்களின் குரல் எப்போதுமே பலகீனமாகவேத் தோன்றும். தபலா போன்ற இசைக் கருவிகளுக்கிடையே பெண்களின் குரல் பெரிதாகத் தோன்றாது என்கிறார்.

  சித்ராவின் குரல் மென்மையான மெலடிகளுக்கு மிகவும் பொருத்தமானது. சித்ராவின் குரலில் இன்று தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் வந்து விட்டன. தென்னிந்தியாவைத் தாண்டி ஒரியா, பெங்காலி என்றும் சித்ராவின் குரல் சென்று விட்டது.

  சித்ராவுக்கு மிகவும் பிடித்தமானது கர்நாடக இசைதான். ஆனால் அதைப் பாட நேரம் கிடைப்பதில்லை என்று வருத்தப்படுகிறார் சித்ரா. தந்தை கிருஷ்ணன் நாயரிடம் முதல் கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார் சித்ரா. பிறகு, டாக்டர் ஓமனா குட்டியிடம் முறைப்படி முழுமையாக கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டார்.

  இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தவர் சித்ரா. எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன், இவர் பாடிய "சத்யா து னே என்ற டூயட் பாடல் சித்ராவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது.

  தமிழில் இளையராஜாவின் இசையில் நீதானா அந்தக் குயில் படத்தில் சித்ரா அறிமுகமானார். இளையராஜா குறித்து சித்ரா கூறுகையில், நான் எம்.பி.ஏ. தேர்வு எழுத வேண்டியிருந்தது. அப்போது இளையராஜா, தனது சிந்துபைரவி படத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தப் பாடல் எனக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தரும் என்று அப்போது அவர் கூறினார். அதேபோலவே, 1985-ம்ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது அப்பாடலுக்குக் கிடைத்தது.

  விருதுகளைப் பெறுவது பொழுதுபோக்கா?

  அப்படி எல்லாம் இல்லை. எப்போதுமே நான் விருதை எதிர்பார்ப்பதில்லை. விருதும், அங்கீகாரமும் கிடைத்தால் மகிழச்சியடைவேன். அவ்வளவுதான்.

  இசையில் முன்னோடியாக யாரைக் கருதுகிறார் சித்ரா?.

  இசையில் எனக்கு பெரிய அளவில் யாரும் முன்னோடியாக இல்லை. எனது மூத்த அக்கா பீனாதான் முதல் ஆதர்ச பாடகி. பல்கலைக்கழக அளவில் அவர் பாடலுக்காக நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். அவரைப் பார்த்துதான் பாடகியாக வர வேண்டும் என்ற ஆசை எனக்குள் முகிழ்த்தது.

  பிறகு, ஜானகியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரும் எனக்கு ஒரு ஆதர்ச பாடகி.


  சவாலுக்குரியதாக எந்தப் பாடலாவது இருந்திருக்கிறதா?

  கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் எல்லாமே எனக்கு சவாலுக்குரியதாகவே இருந்திருக்கின்றன. தவறில்லாமல், முழுமையாக பாடி முடிக்க வேண்டும் என்ற பயத்துடன்தான் அப்பாடல்களை பாடுவேன். சிந்து பைரவியில் வரும் பாடல்கள் எல்லாம் எனக்கு பெரும் சவாலாக அமைந்தன.

  எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறீர்களே. எப்படி இது சாத்தியமாகிறது?

  (பதிலுக்கு முன் சில விநாடிகள் அழகாக சிரிக்கிறார்) எனக்கு எப்போதுமே கோபமே வராது. அப்படியே வந்தாலும் உடனேயே போயிடும். சிறு குழந்தையாக இருந்தபோதிருந்தே இப்படித்தான். எதையும் மனசில் போட்டுக் குழப்பிக் கொள்வது எனக்குத் தெரியாது. கோபமோ, விரக்தியோ, உடனே வெளியே அனுப்பிடுவேன். இதுவும் எனது நிரந்தர சிரிப்புக்குக் காரணமா இருக்கலாம்.

  ஏ.ஆர்.ரகுமான் வந்த பிறகு தென்னிந்திய திரையுலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு பாடகியாக இதை எப்படி பார்க்கிறீர்கள்?

  சமீபத்திய இசையில் ராக் மற்றம் பாப் சாயல்கள் அதிகரித்து விட்டன. ஆனால் மெலடிகளுக்கு இன்னும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் இன்றும் கோலோச்சுவது மெலடிப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்தமானது மெலடிதான். இருப்பினும் எல்லா வகை பாடல்களையும் பாடுவதறகே ஆசைப்படுகிறேன்.

  உங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள்...

  சிந்துபைரவியில் பாடறியேன் படிப்பறியேன், புருஷ லட்சணத்தில் ஒரு தாலி வரம் கேக்க வந்தேன் தாயம்மா என்ற நீண்ட அம்மன் பாடல், அழகனில் தத்தித்தோம். இதில் நிறைய கடினமான ஸ்வரப் பிரயோகம் இருக்கும்.சிரமப்பட்டு பாடினேன். இப்படி நிறைய.

  பிடித்த இசையமைப்பாளர்..

  அய்யோ..ரொம்பக் கஷ்டமான கேள்வி. ஹிந்தியில் அனு மாலிக், ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்றியுள்ளேன். தமிழில் என்னை அறிமுகப்படுத்தியது இளையராஜா. அவரது இசையில் பல நல்ல பாடல்களைப் பாடியுள்ளேன. முதல் தேசிய விருதும் அவரது இசையில்தான் கிடைத்தது.

  அவர், இவர் எனறு குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி, எல்லா இசையமைப்பாளர்களும் எனக்குப் பிடித்தமானவர்களதான் என்கிறார் கன்னத்தில் குழி விழும் சிரிப்புடன் சின்னக்குயில் சித்ரா.

  Read more about: chitra cinema songs
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X