»   »  ரஜினி எனது குரு! - சல்மான்

ரஜினி எனது குரு! - சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்ச்சை நாயகன் சல்மான் கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது ரோல் மாடல் என்று கூறியுள்ளார்.

சல்மான் கான் இருக்கும் இடத்தில் சட்டை கூட இல்லாமல் இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக சர்ச்சை இருந்தே தீரும். அந்த அளவுக்கு சல்மான் கானும், சர்ச்சைகளும் கூடப் பிறந்தவை.

ஐஸ்வர்யாவை துரத்தியது, மான் வேட்டையாடியது, சுஷ்மிதா சென்னுடன் சில்மிஷம் என சல்மான் கானும், சர்ச்சைகளும் ரொம்பப் பிரசித்திம்.

இந்த நிலையில் ரஜினிதான் எனது குரு, ரோல் மாடல், அவரது அடியொற்றித்தான் நான் நடைபோடுகிறேன் என்று திடீரென ரஜினி புகழ் பாடியுள்ளார் சல்மான்.

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள மேரிகோல்டு படத்தையொட்டி சென்னையில் சல்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுதான் இப்படிக் கூறினர்.

மேரிகோல்ட் படத்தில் சல்மானுடன் அலி லார்ட்டர், நந்தனா சென், சுசித்ரா பிள்ளை, கிரண் ஜுனேஜா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் வில்லர்ட் காரோல் படத்தை இயக்கியுள்ளார். இவர் 1998ம் ஆண்டு வெளியான பிளேயிங் பை ஹார்ட் படத்தை இயக்கியவர். இப்படத்தில் சீன் கானரியும், ஏஞ்சலினா ஜூலியும் நடித்திருந்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சல்மான் பேசுகையில், ரஜினிகாந்த் எனது உண்மையான ரோல் மாடல். பல சந்தர்ப்பங்களில் அவரது நடவடிக்கைகளைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். அவரது பாணியைப் பின்பற்றுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஒரு பேட்டியில், என்னை தனது ரோல் மாடல் என்று நடிகர் கோவிந்தா கூறியிருந்தார். இதைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்டேன். கோவிந்தாவின் பெருந்தன்மையை இது காட்டுகிறது.

ஆனால் என்னைப் பொருத்தவரை ரஜினிதான் எனது ரோல் மாடல். மிகப் பெரிய இடத்தில் இருக்கிறார் ரஜினி. அவரது இடத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் எட்டி விட முடியாது.

இவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட, படு சாதாரணமாக இருக்கிறார் ரஜினி. சாதாரண நடுத்தர வர்க்க நபரைப் போல எளிமையாக இருக்கிறார். அவரது ஆன்மீக, சமுதாய ஈடுபாடு மிகவும் வியப்பளிக்கிறது.

நிறைய சம்பாதிக்கிறார் ரஜினி. ஆனால் தேவையானவற்றுக்காக மட்டுமே செலவழிக்கிறார். அவரிடம் ஆடம்பரம் இல்லை. திரைத் துறையில் சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அதை எப்படி செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ரஜினி பாய், தனது சம்பாத்தியத்தை நல்ல வழியில் செலவழிக்கிறார். அந்த வகையில் அவரைப் பின்பற்றி நடக்க நான் விரும்புகிறேன் என்றார் சல்மான்.

மேரிகோல்ட் குறித்து சல்மான் கூறுகையில், பலகாரணத்தால் மேரிகோல்ட் தாமதமாகி விட்டது. ஹாலிவுட்டில், படத்தை ரிலீஸ் செய்வதில் சில திட்டங்களை வைத்துள்ளனர். படத்தை மார்க்கெட்டிங் செய்யவே அவர்கள் 6 மாதம் எடுத்துக் கொண்டு விட்டனர். விரைவில் மேரிகோல்ட் திரைக்கு வரும் என்றார்.

சமீபத்தில் அமீர் கான் கூட சென்னைக்கு வந்திருந்தபோது ரஜினியை பாராட்டிப் பேசியிருந்தார். இபபோது சல்மான்.

அடுத்து ஷாருக் கானா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil