வெளியானது கணம் படத்தின் அம்மா பாட்டு... வலிமை பாட்டு மாதிரியே இருக்கே!
சென்னை : நடிகர் சர்வானந்த் அமலா அக்கினேனி, ரீத்து வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கணம்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சர்வானந்த்
நடிகர் சர்வானந்த் தமிழ், தெலுங்கு மொழிகளில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் அவர் கணம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

கணம் படம்
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை அமலா அக்கினேனி நடித்துள்ளார். அவர் சர்வானந்துக்கு அம்மாவாக நடித்துள்ளார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடிகை நதியா அழகான அம்மாவாக நடித்தது போல தற்போது அமலா களமிறங்கியுள்ளார்.

மீண்டும் தமிழில் சர்வானந்த்
வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்த வகையில் தற்போது கணம் படத்தை தயாரித்துள்ளது. ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு பிறகு தற்போது தமிழில் சர்வானந்த் கணம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

உமா தேவி வரிகள்
படத்தில் சர்வானந்திற்கு ஜோடியாகியுள்ளார் ரீத்து வர்மா. நாசர், சதீஷ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது படத்தின் அம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு உமா தேவி வரிகளை எழுதியுள்ளார். அவரது சிறப்பான வரிகளுக்கு தனது இசை மூலம் உயிரூட்டியுள்ளார் ஜேக்ஸ் பிஜோய். சித் ஸ்ரீராம் குரலில் பாடல் கேட்பவர்களை மயக்கும் வகையில் அமைந்துள்ளது.

படத்தின் ஆன்மா
இந்நிலையில் இந்த பாடல்தான் படத்தின் ஆன்மா என்று இயக்குநர் ஸ்ரீகார்த்திக் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல்தான் படத்தின் முதுகெலும்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாடலை உருவாக்கியதாகவும் இந்தப் பாடலுக்கு பிறகே படம் குறித்த புரிதல் படக்குழுவினருக்கு ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான அம்மா பாடல்
தெலுங்கில் மறைந்த பாடலாசிரியர் எழுதிய கடைசி பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. தெலுங்கில் பாடல் உருவான நிலையிலும் தமிழில் அப்படியே மாற்றாமல், மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கியுள்ளனர். அம்மா என்றழைக்காத, அம்மா... அம்மா போன்ற பாடல்களுக்கு இணையாக இந்தப் பாடல் அமைந்துள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பாராட்டுக்களை பெற்ற பாடல்
இந்தப் பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே அனைவரையும் கவர்ந்துள்ளது. அனைவரது பாராட்டுக்களுக்கும் உள்ளாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆயினும் சமீபத்தில் வலிமை படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பாடலை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விரைவில் ரிலீஸ் அப்டேட்
மிகுந்த பொருட்செலவில் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. தெலுங்கில் ஒகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











