»   »  சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...! - மறக்க முடியாத நா காமராசன் வரிகள்

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...! - மறக்க முடியாத நா காமராசன் வரிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ.வி.எம்மின் 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் நா. காமராசன் எழுதிய பாடல் 'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்பது. நா. காமராசனின் தமிழ் ஆட்சியும் சொல்லழகும் சந்தத்தோடு மெல்ல வழிந்து இதயத்தை வேதனைக்கடலில் மூழ்கடிக்கும் பாங்கும் அப்பாடலில் உண்டு. கேட்பவர் எவரும் பாடலின் இறுதியில் விழிக்கடை நீர்த்திரளைத் துடைக்காமல் எழமுடியாதபடி இருக்கும் அப்பாடல். பாடிய ஜேசுதாஸின் குரலில் அத்தனை உருக்கம் பாடலெங்கும் பனியாக மூடியிருக்கும்.

An unforgettable song of Na Kamarasan

நானே எனக்கு நண்பன் இல்லையே என்று போக்கிரித்தனமாக சுற்றியலைந்த நாயகன் காதலுற்றுத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு உன்னதமான நிலைக்கு வருவான். அவர்களுடைய காதல் வாழ்வுக்கு சாட்சியாக ஒரு மகள் பிறந்திருப்பாள். அச்செல்ல மகள் தந்தைசொல் மீறித் தன் தலைவனைத் தேடி மணந்து பெற்றவரை நீங்குவாள். தன் இழிவுகள் அனைத்தையும் ஏற்றுச் சகித்துத் தன்னையும் சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்கிய தன் காதல் மனைவி வெந்து துடிப்பதைக் காணமுடியாத நிலையில் நாயகன் பாடும் பாடல் அது. பிரிவுத் துயரமும் உறவுகளின் நிலையாமையும் அந்தப் பாடல் வரியெங்கும் பிசினாக ஒட்டியிருக்கும்.

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா ?
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ?

சிட்டுக்குருவி நம் மகள். நம் இல்லக்கூட்டில் செல்லச் சிட்டாகப்பிறந்த ஒரே மகள். உணவையும் உயிரையும் வாயிட்டு ஊட்டி வளர்த்த அன்புச் சிறுவள். அந்தச் சிட்டுக் குருவிக்குச் சிறகு முளைத்துவிட்டது. சிறகு முளைத்ததும் கொஞ்சமும் காத்திருக்காமல் அவசரப்பட்டுப் பறந்து போய்விட்டாளே ! ரத்தத்தைப் பொழிந்து வளர்க்கப்பட்டவள், ரத்த உறவாக என்றும் இருந்து நம்மீது அன்பு செலுத்த வேண்டியவள் - அவளோடு இருந்த அத்தனை உறவும் தன் மணவாளனைத் தேடிப் பறந்ததில் கிளைபோல் முறிந்துவிட்டதே ! நாம் இந்த வாழ்வில் பெற்ற ஒரே பேறு நான் தந்தை என்பதும் நீ தாய் என்பதும்தான். அந்தப் பேற்ற நமக்குப் பிறந்து வழங்கியவள் நம் மகள். அவளே நம்மைத் துறந்து சென்றுவிட்டபிறகு அந்தப் பெருமையைக் கூட நாம் இழந்துவிட்டோமா ? அவளே இல்லையென்றால் நான் தந்தையும் இல்லை, நீ அன்னையும் இல்லையே ! இல்லை இது வெறும் கனவுதானா ? அல்லது அப்போதைக்கு நின்று நிலவிப் பின் மறந்தி நீங்கிவிடவேண்டிய நினைவா ? சொந்தம் என்பது பிறப்போடு வருவது. பந்தம் என்பது வாழ்வின் நிகழ்வுகளில் வந்து சேர்வது. அப்படி நெஞ்சோடு பந்தமாக வந்து சேர்ந்தவை எல்லாமே என்றும் தொடரும் தொடர்கதையா ? அல்லது அவ்வப்போது முடிந்துவிடும் சிறுகதையா ?

நாம் போடும் மேடைகளோ நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம்
கூடி வாழக் கூடு தேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாடக் காடு தேடும் யார் செய்த பாவம் ?
தாயென்னும் பூமாலை தரை மேலே வாடுதே !

இந்த உலகில் நாம் நடந்துகொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே நாடக மேடை நிகழ்வுகளே. அவை வெறும் போலிகள். நாம் நம்பிப் பயணிக்கும் ஓடங்களாகிய உறவுகள் எல்லாமே மூழ்கி உருவழியும் காகித ஓடங்களே. பாசம் என்றா சொல்ல முடியும் ? எல்லாமே வெறும் வேஷம் என்பதாகத்தானே இருக்கிறது ? அல்லது காலம் இட்டுக் காட்டுகிற வண்ணக்கோலங்களா இவையெல்லாம் ? ஜோடிக்குருவிகளாக இருந்த நம்மோடு கூடிவாழ்வதற்காக நம் உறவுக் கூட்டுக்கு ஓடி வந்த ஜீவன் நம் மகள். சிறகு முளைத்ததால் ஆடிப் பாடி மகிழ்வதற்காக நம் பாதுகாப்பான கூட்டைவிட்டு அது காட்டுக்குப் பறந்து போய்விட்டதே. அந்தக் காட்டில் அந்தச் சிறுகுருவியைக் கொத்தித் தின்பதற்காக எத்தனை எத்தனை பருந்துகளும் வல்லூறுகளும் வட்டமிடுகின்றனவோ! அந்தத் துயரத்தில் அவளைப் பெற்ற தாயென்னும் இந்தப் பூமாலை தரைமேலே வாடி வதங்குகின்றதே !

காலங்கள் மாறிவரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலைக் கூறுவதெங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழவந்த வேளை
கண்கள் ஆடப் பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே !

புரிகிறது. காலங்கள் மாறிவருகின்றன. அதற்கேற்ப மாறிவிட்ட காட்சிகளைத்தான் இங்கே காண்கிறேன். என் மகள் பிரிந்துபோனது பருவத்தின் நிர்ப்பந்தம், ஒருநாள் மனம் மாறித் திரும்பவருவாள் என்றெல்லாம் நியாயங்கள் சில இருக்கலாம். ஆனால், அந்த நியாயங்கள் எங்களுக்கு ஆறுதலைக் கூறுவதில்லை. மஞ்சளும் குங்குமமும் மார்புச் சந்தனமும் சூடுகின்ற எங்கள் கன்னிப் பாவை எங்கள் குலவிளக்கு. பாசத்தின் ஒளிவிளக்கைத் தன் திருக்கரங்களில் ஏந்தி எங்களோடு வாழ்வதற்காக வந்த வேளை இது என்று எண்ணியிருந்தோம். தன் கண்கள் ஒருவனைக் கண்டு காதலில் ஆடிவிட்டதால் அவள் புதிதாக அடைந்திருக்கும் பெண்மை அவளது எண்ணத்திற்கு ஒத்துப்பாடி விட்டதால் இன்பம் கண்டு மகிழும் வழியில் வளர்ந்த மங்கையாகிச் சென்றுவிட்டாள். சரி அதற்காக அவளைச் சபிக்கவா முடியும் ? தாயும் தந்தையுமாகிய நாங்கள் கெட்டு அழிவுற்று வாடி நின்றாலும் அவள் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும் !

மகளைப் பெற்றவர்கள் எவரும் இந்தப் பாடலின் ஆழத்தை இன்னும் அதிகமாக உணர முடியும். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னை அடர்த்தியான மௌனம் சூழ்ந்துகொள்ளும். அது நானும் மகளைப் பெற்றவன் என்பதாலோ என்னவோ !

- கவிஞர் மகுடேசுவரன்

English summary
Chittukku Chella chittukku... is one of the best and soulful lyrics of late poet Na Kamarasan's in Ilaiyaraaja's music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil