யூட்யூப்பில் சாதனை போட்டி... மாஸ் காட்டிய அனிருத்தின் டாப் 5 பாடல்கள்
சென்னை : இசையமைப்பாளர் அனிருத், திரையுலகில் அடியெடுத்து வைத்து 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அனிருத் தனது 22 வது வயதிலேயே இசையமைக்க துவங்கி விட்டார்.இவர் இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 9 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா என டாப் ஹீரோக்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து விட்டார் அனிருத். பல மாஸ் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத்தின், திரும்ப திரும்ப ரசிகர்களை கேட்க வைத்து, யூட்யூப்பில் சாதனை படைத்த டாப் 5 பாடல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒய் திஸ் கொலவெறி டி
தனுஷ் நடித்த 3 படம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான படம். அனிருத் முதன் முதலில் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகம் முழுவதும் பாப்புலர் ஆகி, இணையத்தை தெறிக்க விட்டது. தனுஷ் எழுதி, பாடிய இந்த பாடலுக்கு வெறும் 10 நிமிடங்களில் இசையமைத்து கொடுத்தாராம் அனிருத். யூட்யூப்பில் முதன் முதலில் மிகப் பெரிய அளவில் பாப்புலர் ஆன தமிழ் பாடல் இது தான். இந்த பாடலுக்காக தனுஷ், அனிருத் பல விருதுகளை பெற்றனர்.

ஆளுமா டோலுமா
அஜித்திற்காக அனிருத் இசையமைத்த முதல் பாடல் வேதாளம் படத்தில் வரும் ஆளுமா டோலுமா பாடல் தான். சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்திற்கு ரோகேஷ் பாடல் வரிகள் எழுதினார். பாட்ஷாவுடன் இணைந்து அனிருத்தும் இந்த பாடலை பாடி இருப்பார். இந்த பாடல் யூட்யூப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

தர லோக்கல்
தனுஷ் நடித்த மாரி படத்தில் வரும் இன்ட்ரோ பாடலான தர லோக்கல் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்ததுடன், தானே பாடி, தனுஷுடன் இணைந்து ஆடவும் செய்திருப்பார். பாலாஜி மோகன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், காஜல் அகர்வால் லீட் ரோலில் நடித்திருந்தனர். இந்த பாடல் 92 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூட்யூப்பில் பெற்றது.

மரண மாஸ்
ரஜினிக்காக அனிருத் இசையமைத்த முதல் படம் பேட்ட. இதில் முதலில் இசையமைக்கப்பட்ட மரணம் மாஸ் மரணம் பாடல் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் எழுந்து ஆட்டம் போட வைத்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படத்தின் வரும் மரணம் மாஸ் மரணம் பாடல் மிகப் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இந்த பாடல் யூட்யூப்பில் 190 க்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
Recommended Video

வாத்தி கம்மிங்
அனிருத் இதுவரை இசையமைத்ததிலேயே மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற பாடல் என்றால் அது விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் தான். தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரும்ப திரும்ப கேட்க வைத்த பாடல் இது. இந்த பாடலுக்கு தோளை குலுக்கி ஆடாத பிரபலமே இல்லை என சொல்லும் அளவிற்கு சாதனை படைத்து விட்டது வாத்தி கம்மிங் பாடல். அனிருத் இசையமைத்த இந்த பாடலை அறிவு எழுதி இருந்தார். இந்த பாடல் யூட்யூப்பில் 266 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











