»   »  கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்

கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்

By Sudha
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை என்றால் - எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து - அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து - அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் - இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பதுதான்.

திரைப்பட விழாக்களைத் தவிர்க்கிறேன்...

பொதுவாக இப்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் - திரைப்பட இசை கேசட் வெளியீட்டு விழாக்கள் - திரைப்படத் தொடக்க விழாக்கள் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள எனக்கு ஒரு வகையிலே அச்சம். ஏனென்றால் அந்த விழாவைத் தொடர்ந்து திரை உலகத்திலே இருக்கின்றவர்களே கூட, அதை விமர்சிக்கின்ற வகையில் அந்த நிகழ்ச்சியை விமர்சித்தால் கூட பரவாயில்லை - அதை வைத்து என்னையே விமர்சிக்கின்ற வகையில் நிலைமை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் கூடுமான வரையில் அத்தகைய நிகழ்ச்சிகளை-ஆங்கிலத்திலே சொல்வார்களே avoid என்று- அப்படி தவிர்ப்பதை நான் மிகுந்த அக்கறையோடு கையாண்டு வருகிறேன்.

இன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு - இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் - அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் - அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.

சினிமா துறையைவிட்டு...

இவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை - உரையாடல்களை - நடிப்பை - இசையை - இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் இந்தக் கருணாநிதி என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித்தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

சினிமா உலகத்தை விட்டு - திரைப்படத் துறையை விட்டு - எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட ஒரு சிலாக்கியமான, நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.

ஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் - எழுத வேண்டும் - எழுத வேண்டும் என்பதிலேதான். எழுத்தை மறந்து விட்டு - இந்தக் கலைத் துறையை விட்டு - இலக்கியத் துறையை விட்டு விட்டு - அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம்.

எனவேதான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

என் வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கா?

பொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட - என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாக இருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன்.

ஒரு பெரியவர்(?) அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் - என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் (?) என்று சிலரால் கருதப்படுபவர் - சொல்லியிருக்கிறார் - கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!

சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம்தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிரார்கள்? மன்னிக்க வேண்டும் - ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் - செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன.

நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

கலைக் குடும்பம் என்று நான் இந்தக் குடும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது - இதிலே நான் மாத்திரம் என்ன - வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? எல்லோரும் என்னுடைய குடும்பம்தான்.

கலைத்துறைக்கு விரோதியாக...

அதனால்தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் - கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று - ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் - ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பதுதான் வேடிக்கை, ஆச்சர்யம்.

எனக்கு குடும்பம் இருக்கிறதே...

தமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா? நான் படம் எடுத்து - படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் - அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம்தான் இருக்கிறது என்கிறார்கள்.

நானும் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இதுதான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது? எனக்கு குடும்பம் இருக்கிறதே? குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா? குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் - உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள்.

இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை - ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா? சரி தானா? என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிழலோடு போராட்டம்:

ஆனால், சில பேருக்கு - யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை - முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால்தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு - அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் - அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா:

இந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.

எந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன - கதையின் போக்கு என்ன - கதையின் கதாபாத்திரங்கள் யார் - கதை நடைபெறுகின்ற காலம் எது - என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு "இசைஞானி'' என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான்.

நல்ல காலம் - பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் - வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது - பல பேர் என்னிடத்திலே பட்டம் பெற்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்? கொடுத்தது கொடுத்ததுதான்.

இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் - சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் - நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், என்றார்.

பொள்ளாச்சி மகாலிங்கம்:

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்த்திப் பேசுகையில், 'கொங்கு மண்டல வரலாற்றை அருமையான நவீனமாகக் கொடுத்திருந்தார் முதல்வர் கலைஞர். எதையும் சினிமா என்ற ஊடகம் மூலம் சொல்லும்போது, அதன் வீச்சு பல மடங்காகிறது. இப்போது பொன்னர் சங்கர் கதை சினிமா வடிவில் வருவதால், கொங்கு மண்டலத்தின் பெருமை உலகம் முழுக்க பரவப் போகிறது. அது ஆழந்த மகிழ்ச்சியைத் தருகிறது", என்றார்.

விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, மத்திய அமைச்சர் நெப்போலியன், கவிஞர் வைரமுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், டாக்டர் பழனி பெரியசாமி, கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், பட அதிபர் ஆறுமுகனேரி முருகேசன், நடிகர் விஜயகுமார், நடிகை பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடிகர் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். முடிவில் நடிகர் தியாகராஜன் நன்றி கூறினார்.

முன்னதாக பிரசாத் லேப் ஸ்டூடியோவில் முதல்வர் கருணாநிதிக்கு பொன்னர்-சங்கர் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதை அவர் சுமார் 2.30மணி நேரம் பார்த்தார். படம் பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Chief Minister M Karunanidhi released the audio of the historical magnum opus Ponnar Sankar on Sunday evening. After the CD release, Karunanidhi told that some vested interest targeting his family members who are working in film industry and always portraying them wrongly.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more