twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்திரன் போக்குவரத்து இடையூறு எதிரொலி-வழக்குப் போடப் போகிறார் டிராபிக் ராமசாமி

    By Staff
    |

    Traffic Ramasamy
    சென்னை: பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை கொடுக்கும் வகையில் எந்திரன் படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதன் எதிரொலியாக, இதுபோல பொதுமக்களை பாதிக்கும் வகையில் முக்கிய சாலைகள், மேம்பாலங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கக் கோரி பொது நலன் வழக்கு தொடரப் போவதாக பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுவாக போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதத்தில், எவ்வித நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதிக்கக் கூடாது. ஆனால், கிண்டி மேம்பாலத்தில் அதுவும் போக்குவரத்து அதிகம் ஏற்படும் முக்கியமான நேரத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால், அங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேம்பாலத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்ததற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

    பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நான் பல பொது வழக்குகளை தொடுத்துள்ளேன். உயர்நீதிமன்றமும் பல முக்கிய வழக்குகளில், தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

    போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் விதத்தில், முக்கியமாக கிண்டி மேம்பாலத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது சட்ட விரோதமானது. இதனால், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அவர்களால் அவசரத்துக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வருங்காலங்களில் இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதத்தில் மேம்பாலங்கள், முக்கிய சாலைகளில் சினிமா படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது.

    இதுகுறித்து தமிழக அரசுக்கும்,போலீஸ் அதிகாரிகளுக்கும் தந்தி அனுப்புகிறேன். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதுகுறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்வேன் என்றார் ராமசாமி.

    இதேபோல, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சந்தானமும் எந்திரன் ஷூட்டிங்குக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுமக்கள் பாதிக்கும் வகையில் படப்பிடிப்புகள் நடத்துவது கண்டிக்கத்தக்க விஷயம். கடந்த ஆண்டு குரோம்பேட்டை, எம்.ஐ.டி., மேம்பாலத்தின் மீது சினிமா படப்பிடிப்பு ஒன்று நடந்தது.

    அப்போது, அனுமதி மறுக்க கோரி, குரோம்பேட்டை போலீ சாரிடம் எங்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் சில தகவல்கள் பெறப்பட்டன.

    நெரிசல் மிகுந்த சாலையில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்பது அரசு தரும் பதில். ஆனால், அதையும் மீறி சிலர், செல்வாக்கை பயன்படுத்தி, விதிமுறையை தங்கள் இஷ்டத்திற்கு மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

    படப்பிடிப்பு நடத்த தலைமைச் செயலகத்தில் அனுமதி பெறப்பட்டாலும், போலீசார் தான் சம்பவ இடத்தில் ஏற் படும் பாதிப்பை உணருகின்றனர். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுமதி வழங்க எந்த பரிந்துரையையும் ஏற்கக் கூடாது என்று போலீசார், அனுமதி வழங்கும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    நலச்சங்கங்கள் சார்பில் பொதுமக்கள் பிரச்னையை மையப்படுத்தி, அமைதி போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த போலீசார் சாதாரணமாக அனுமதி வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும், நாம் கேட்கும் இடத்தில் அனுமதி தருவதில்லை. மேலும், பாதுகாப்பிற்கு போலீசார் இல்லை என்பது வழக்கமான வாசகம்.

    ஆனால், படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு மட்டும் பாதுகாப்புக்கும், பார்வையாளர்களை விரட்டியடிப்பதற்கும் எங்கிருந்து தான் போலீசார் வருகின்றனரோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X