twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீ படத்துக்கு தடை இல்லை

    By Staff
    |

    Namitha with Sundar C in Thee
    சுந்தர்.சி நாயனாக நடிக்க, நமீதா, ராகினி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள தீ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிடுகிறது.

    இந் நிலையில், படத்தில் வக்கீல்களை போலீஸார் அவமதிக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றிருப்பதற்கும், வக்கீல்களை போலீஸார் அடிப்பது போன்ற காட்சிகளுக்கும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்கள் கூறுகையில்,

    தமிழக பெண்களின் கற்பை பற்றி இழிவாக எடுத்துரைத்த குஷ்புவின் கணவர் சுந்தர் .சி. நடித்து வெளி வர இருக்கும் ஒரு படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) 5 நிமிடத்துக்கு ஒரு முறை டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

    அதில், கோர்ட்டு வளாகத்திற்குள் போலீஸ் உடையில் இருக்கும் சுந்தர் .சி. வக்கீல் ஒருவரை தாக்குவது போல வும் அவரை பெயில் என்று வந்தால் கையை காலை உடைப்பேன் என்று ஏக வசனத்தில் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.

    போலீசாரால் வக்கீல்கள் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டு இருக்கும் வேளையில் வக்கீல்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் அந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

    சம்பந்தப்பட்ட தொலைக் காட்சி மீதும், பட நிறுவனத்தின் மீதும் அவதூறு வழக்கு தொடருவோம். எங்களது போராட்டத்துக்கு ஒத்துழைக்கா விட்டாலும், மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினர்.

    இந்த நிலையில் சென்னையை சேர்ந்த வக்கீல் விஜயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில்,

    இந்த படத்தின் டிரைலர்' டி.வி. சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் உள்ள காட்சியை பார்த்தபோது வக்கீல்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த படத்தில் உள்ள காட்சியானது வக்கீல் உடை அணிந்த ஒருவரை, போலீஸ் அதிகாரி துப்பாக்கியை வைத்து மிரட்டுவது போலவும், ஜாமீன் மனுவுடன் வரக்கூடாது என்று மிரட்டும் வகையில் காட்சி உள்ளது.

    அரசியல் சட்டத்தின்கீழ் வக்கீல் கடமை ஆற்ற வழங்கிய உரிமையை தடுப்பதுபோல் காட்சி உள்ளது. ஆகவே, இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    மனுவை நீதிபதி எம்.ஜெயபால் நேற்று விசாரித்தார். அதைத்தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவில்,

    தற்போது நிலவும் சூழ்நிலையில் அந்த படத்தில் காட்டப்படும் காட்சிகள், நிலமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றும், தீ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார்.

    குறிப்பிட்ட சில காட்சிகளில் வக்கீல் மற்றும் போலீசாரின் பங்களிப்பு காட்டப்படுகிறது. கடமை தவறும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சில நல்ல அதிகாரிகள் பற்றியே முக்கிய கதை சுழல்கிறது என்று பிரதிவாதியான சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டது.

    மேலும், இந்த படத்தின் பிரின்ட், உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது என்றும் எனவே படத்துக்கு இப்போது தடை விதித்தால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

    அதுதவிர, அந்த படத்தில் வக்கீல்கள் தொடர்பாக வரும் காட்சிகள் தொகுப்பை (கிளிப்பிங்ஸ்) டி.வி. மற்றும் வேறு மீடியா வழியாக காட்ட மாட்டோம் என்று சன் பிக்சர்ஸ் உறுதி அளித்தனர்.

    இந்தப் படத்தை பிரிவியூ தியேட்டரில் திரையிட்டு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் காட்ட இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டது.

    எனவே, சன் பிக்சர்ஸ் அளித்துள்ள உறுதிமொழியின்படி, வக்கீல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொகுப்பை டி.வி. மற்றும் வேறு மீடியாக்கள் மூலம் வெளியிட தடை விதிக்கப்படுகிறது.

    படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரதிவாதி செய்து முடித்த கடைசி நேரத்தில் இப்படிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இந்த படம் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே, இந்த நிலையில் படத்துக்கு தடை விதித்தால் அவர்களுக்கு கடும் பிரச்சினை ஏற்படும்.

    தீ படத்தை முழுவதும் பார்த்த பிறகே, அப்படிப்பட்ட காட்சிகள் பற்றி முடிவுக்கு வர முடியும். மேலும், இந்த படத்தை பார்த்த பின்னரே அதை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட வாரியம் அனுமதித்து இருக்க முடியும். எனவே, தீ படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க முடியாது.

    இந்த படத்தை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிரிவியூ தியேட்டரில் இன்று மாலை (27ம் தேதி) 6.30 மணிக்கு திரையிட வேண்டும். வழக்கின் வாதி, பிரதிவாதியின் வக்கீல்களும் இந்த படத்தை பார்க்க வர வேண்டும். மனு தொடர்பாக பிரதிவாதிகள், மார்ச் 2ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X