என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்..ராகவா லாரன்ஸ் திடீர் அறிவிப்பு
தனது படங்கள் மூலம் வரும் வருமானம் மற்றும் அறக்கட்டளை மூலம் வரும் வருமானங்களை வைத்து ராகவா லாரன்ஸ் ஏராளமான உதவி செய்து வருகிறார்.
இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என ராகவா லாரன்ஸ் திடீர் என அறிவித்துள்ளார்.
எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர், வடசென்னையை சேர்ந்தவர், நடனம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி வைத்தவர் படிப்படியாக முன்னேறி தமிழ், தெலுங்கு என ஹீரோவாக கொடிகட்டி பறக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மேலும் பிரபலமான ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார். பார்வை மாற்று திறனாளிகள் குழு அமைத்து அவர்களுக்கு இசை குழு அமைத்து உதவி வருகிறார்.

சிறிய அளவில் ராகவா லாரன்ஸ் செய்ய ஆரம்பித்த உதவி பல்கி பெருகி பெரிய அளவில் வட இந்திய நடிகர் சோனு சூட் போல் அறக்கட்டளை அமைத்து உதவி வருகிறார். சமீபத்தில் தனது அறக்கட்டளைக்கு இனி யாரும் உதவி பணம் அனுப்பவேண்டாம் என்கிற கோரிக்கை வைத்திருந்தார். லாரன்ஸ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர், ரஜினி நடித்த சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் அதன் இயக்குநர் வாசு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இன்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது, "எனக்குள் ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று நான் முதல் அடி எடுத்து வைக்கிறேன். உதவி கேட்பதற்காக ஏழைகள் பணக்காரர்களின் காலில் விழுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன், உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை, அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஒரு குடும்பம் தங்கள் குழந்தைகளுக்கு திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக என்னிடம் வரும்போது, உதவி கேட்டு என் காலில் விழுந்து விடுகிறார்கள். நான் விலகிச் செல்கிறேன், குழந்தையின் முகத்தைப் பார்க்கிறேன், உதவிக்காக பெற்றோர்கள் காலில் விழுந்தவுடன் குழந்தை உடனடியாக அழத்தொடங்குகிறது. பெற்றோர்களும் குழந்தைகளும் படும் வேதனையை என்னால் புரிந்து கொள்ளவும், உணரவும் முடிகிறது.

ஏனென்றால் எந்த தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு ஹீரோவாக இருக்க தான் விரும்புவார். பணக்காரர்களிடம் பணம் இருப்பதால், அவர்களின் காலில் விழுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன். மேலும், வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை என் காலில் விழ வைக்கிறார்கள். கடவுளும் குழந்தைகளும் ஒன்று என்று நான் நம்புகிறேன்,
சில சமயங்களில், நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்.
எனது சிறிய ஈகோவும் மறைந்துவிடும் என்று நம்புகிறேன். இன்று நான் எனது ரசிகர்களை சந்தித்து இந்த மாற்றத்தை கொண்டு வர சிறிய முயற்சி எடுக்கிறேன், உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பான காணொளியை விரைவில் வெளியிடுவேன்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் லாரன்ஸ் என்ன சொல்ல வருகிறார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











