‘அப்பு’ ஆகும் ஷாரூக்... ஆனா, கமல் மாதிரி முட்டியை மடக்க மாட்டாராம்!
சென்னை: ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் புதிய படத்தில் குள்ள மனிதர் வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஷாரூக். ஆனால், கமலைப் போல் கஷ்டப்பட்டு கால்களை மடக்கு நடித்து சிரமப் படாமல் கிராபிக்ஸ் உதவியுடன் குள்ள மனிதர் ஆகிறாராம் ஷாரூக்.
சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தை கமல் தயாரித்து இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு வேடத்தில் குள்ள மனிதராக நடித்திருந்தார் கமல்.
கால்களை மடக்கி முட்டியால் நடந்து என பெரும் பயிற்சிக்குப் பின் இந்தக் கதாபாத்திரத்தை அவர் சிறப்பாகச் செய்திருந்தார். இன்றளவும் அவரது அபூர்வ சகோதரர்கள் அப்பு கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவதாக உள்ளது.

குள்ள மனிதராக...
இந்நிலையில், இந்தி நடிகர் ஷாரூக்கான் தனது புதிய படத்தில் அப்பு போன்று குள்ள மனிதர் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார்.

கிராபிக்ஸ் உதவியுடன்...
அப்பு போன்று குள்ள வேடத்தில் நடிக்க இருக்கும் ஷாரூக், அதற்காக பெரிதும் சிரமப்பட்டு பயிற்சி எடுக்கப் போவதில்லை. காரணம், முழுக்க முழுக்க கிராபிக்ஸிலேயே அவரை குள்ள மனிதராக மாற்ற இருக்கிறார்கள்.

ஹாலிவுட் டீம்...
இதற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படம் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' படத்தின் கிராபிக்ஸ் டீம் தற்போது மும்பை வந்து இறங்கியிருக்கிறது. இந்தக் குழுவின் உதவியோடு தான் குள்ள மனிதர் அவதாரம் எடுக்க இருக்கிறார் ஷாரூக்.

காதல் காட்சிகள்...
குள்ள மனிதராக ஷாரூக் நடித்தாலும், படத்தில் காதல் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்கிறார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். ஷாரூக் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளும், டூயட் பாடல்களும் இல்லாமல் எப்படி என்கிறார் அவர்.

எதிர்பார்ப்பு...
ஆக மொத்தத்தில் காதல் திரைப்படமான இது மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷாரூக் குள்ள மனிதராக நடிக்கிறார் என்ற தகவலாலேயே இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











