Ajithkumar: ஸ்லீப்பிங் டிசாடர் நோயால் அவதிப்படும் அஜித்குமார்.. கார் ரேஸால் வந்து ஒட்டிக் கொண்ட சிக்கல்!
சென்னை: தமிழ் திரையுலகில் அஜித்குமார் பற்றி தனி அறிமுகம் தேவையில்லை. தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தன் திரைப்படங்கள், அதிரடி சண்டைக் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்த அவர் கார் ரேஸில் இந்தியாவுக்கே பெருமை சேர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் அவர் ஸ்லீப்பிங் டிசார்டர் நோயால் அவதிப்பட்டு வருகிறார் என்ற தகவல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
வயது ஏறினாலும் இன்றைக்கும் காதல் மன்னன் அஜித் தான், என்று அவரை கொண்டாடும் அளவுக்கு ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல், மோட்டார் ஸ்போர்ட்ஸ், கார் மற்றும் பைக் பந்தயங்களிலும் அஜித்துக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பந்தயங்களில் பலமுறை விபத்துகளை சந்தித்த போதிலும், அவர் ஒருபோதும் பின் வாங்கியதில்லை. பந்தயங்கள் மீதான ஆர்வம் காரணமாக, இப்போதும் முழு உற்சாகத்துடன் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், தனது உடல்நலப் பிரச்சனை குறித்து அஜித் குமார் வெளிப்படையாக பேசினார். தூக்கமின்மை (ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர்) நோயால் தான் அவதிப்படுவதாகவும், இதனால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். அஜித் இவ்வாறு தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தூக்கமின்மை: "எனக்குத் திரைப்படங்களும், கதைகளும் பிடிக்கும். ஆனால், என் வாழ்க்கை முறை காரணமாகத் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை. விமானப் பயணங்களின் போது மட்டுமே நான் ஓரளவு ஓய்வெடுக்கிறேன். அப்போதும், தூக்கமின்மை பிரச்சனையால் அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். என்னைத் தூங்க வைப்பது மிகவும் கடினம்," என்று அஜித் கூறினார்.இந்த பிரச்னை, தனது உடல்நலம் மற்றும் அன்றாட வழக்கத்தை கடுமையாகப் பாதிப்பதாகவும், பல பணிகளை விட ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் பேசினார்.

கொரியன் சினிமாக்கள்: சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகளில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து பேசிய அஜித், சரியான நபர்களின் கைகளில் இருந்தால் சமூக ஊடகங்களில் ஒரு சிறந்த கருவி என்றார். சமூக ஊடகங்கள் மூலம் இந்திய ரசிகர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும். உலக அளவில் நமது திரைப்படங்களும், வெப் சீரீஸ்களும் சென்றடைய வேண்டும். கொரிய கதைகள் உலகை எப்படி ஈர்த்ததோ, அதே திசையில் நாமும் உழைக்க வேண்டும் என்று அஜித் பேசினார்.
விபத்துகள்: தனது ரேஸ் வாழ்க்கையில் சந்தித்த விபத்துகள் குறித்துப் பேசிய அஜித், அவை விளையாட்டில் இயல்பானவை என்றார். "ஒவ்வொரு ரேஸரும், ஒவ்வொரு அணியும் கூறுவது என்னவென்றால், விபத்துகள் மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஒரு அங்கம். ஆம், அவை ஆபத்தானவைதான், ஆனால் மோட்டாஸ் ஸ்போர்ட்ஸ்களுக்குக்கான கார்கள் அத்தகைய விபத்துகளில் இருந்து ரேஸரைப் பாதுகாக்கும் வகையில் தான் வடிவமைக்கப்படுகின்றன. ஓட்டுநரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு மிகவும் அரிதாகவே நடக்கும். ஆனால் கார் மற்றும் ரேஸர் விதிமுறைகளைக் கடந்து சென்று விட்டால், விபத்துகள் தவிர்க்க முடியாதவை" என்று அஜித் தெரிவித்தார்.தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தனது தூக்கமின்மை மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியது, ஒரு பெரிய ஸ்டாரின் வாழ்க்கயில் திரைக்குப் பின்னால் உள்ள சிரமங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள உதவியது. மேலும் அவரது ரசிகர்களை கவலையிலும் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











