ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ஏமாறாதீங்க.. காளி வெங்கட்டின் கண்ணீர் வீடியோ.. மக்களே உஷார்!
சென்னை: பண விஷயத்தில் ஏமாறும் மக்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதில் என்னவென்றால், இந்த இணைய உலகத்தில் நன்கு படித்த மக்கள் ஏமாறுவதுதான் மிகவும் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. தங்களது பணத்தை இழந்த பின்னர் அவர்கள் எடுக்கும் பல விபரீத முடிவுகள் அதிர்ச்சியை மட்டும் இல்லாமல், மன வேதனையையும் கொடுக்கிறது. படித்த மக்கள் அதிகம் ஏமாறுவது ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் தான். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.
ஆன்லைனில் பல ஆப்களில் பணத்தைச் செலுத்தி அதன் மூலம் அதிக வருவாயை ஈட்டுவதற்காக மக்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் மிஞ்சுவது ஏமாற்றம் தான். இப்போதும் கூட பல ஆப்களில் பணத்தை செலுத்தி அவற்றை தங்கமாக சேமிக்கலாம் என்ற விளம்பரங்கள் வந்து கொண்டே உள்ளது. ஆனால் அந்த ஆப்கள் எல்லாம், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிலோ, செபியின் கட்டுப்பாட்டிலோ இயங்குகிறதா என்ற கேள்வியே எழுப்பாமல், குறைந்தபட்ச விசாரணை கூட இல்லாமல் பணத்தை போடும் மக்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் ஆன்லைன் ஷேர் மார்கெட்டில் பணத்தைப் போட்டு, ஏமாறும் மக்கள் இருக்கிறார்கள். இதில் என்ன அதிர்ச்சிகரமான தரவுகள் என்றால், போலியான ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டுகள் மூலம் மட்டும் பல கோடி ரூபாய்களை மக்களை ஏமாற்றி பறித்துக் கொண்டு உள்ளது திருட்டுக் கும்பல். இந்த கும்பல், ஏதோ ஒரு குழுவாக இல்லை, இந்த மோசடி கும்பல்கள் இந்தியாவில் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்து எல்லாம், அந்த ஆப்கள், வெப்சைட்கள் போன்றவற்றின் மூலம் தூண்டிலையும், வலையையும் வீசி மக்களின் பணங்களை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
போலியான ஷேர் மார்க்கெட்: ஏமாந்த மக்கள் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தாலும், அவர்களால் அனைத்து வழக்குகளையும் தீர்த்து வைக்க முடியாத நிலை உள்ளது என்பது கள எதார்த்தமாக உள்ளது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதேபோல், குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை போட்டு, அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில், போலியான ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணத்தைப் போட்டு விடுகிறார்கள். இதனால் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

காளி வெங்கட்: இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் இருந்து, விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். போலியான ஆன்லைன் ஷேர் மார்க்கெட் என்று தெரியாமல் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் டெபாசிட் செய்து ஏமாந்து விடுகிறார்கள். சிலர் தங்களது வருமானம் மட்டும் இல்லாமல், கடன்கள் வாங்கி, சொத்துகளை விற்று, நகைகளை விற்று பணத்தை டெபாசிட் செய்கிறார்கள் என்ற கள நிலவரத்தையும் அந்த விழிப்புணர்வு வீடியோவில் காண்பித்துள்ளார்கள்.
விழிப்புணர்வு: மேலும் மக்கள் இதுபோல ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்கள். அதேபோல் காவல்துறை இந்த வீடியோவைப் பகிர்ந்து, " எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து விலகி இருங்கள் என்ற விழிப்புணர்வு காணொளி போலி பங்குச் சந்தை மோசடிகளை பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இதைப் பார்த்து, விழிப்புணர்வைப் பரப்ப உதவ பகிருங்கள்" என்று கேப்சன் இட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











