விஜய் என்ன சாதிச்சாரு.. அப்பா, மனைவி, மகனையே கிட்ட சேர்த்துக்கல.. நெப்போலியன் இந்த வாங்கு வாங்குறாரே
சென்னை: விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அவருக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இப்போதுவரை அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. விரைவில் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டாலும் அனைவரையும் ஒரு மண்டபத்துக்கு அழைத்துதான் அந்த சந்திப்பை நிகழ்த்தவிருக்கிறாராம். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் மக்களை சந்திக்கும் நோக்கத்தில் 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து சனிக்கிழமை மட்டும் சந்திக்கிறார். அந்தவகையில் சில வாரங்களுக்கு முன்பு கரூர் மற்றும் நாமக்கல்லுக்கு சென்றார். இரண்டு இடங்களிலும் அவர் வருவதாக சொன்ன நேரம் வேறு; வந்த நேரம் வேறு. ரொம்பவே தாமதமாக வந்ததன் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள்.
நேரில் சென்று சந்திக்கவில்லை: இந்த விவகாரம் தொடர்பாக முதலில் ஒரு ட்வீட் பிறகு ஒரு வீடியோவை போட்டார் விஜய். அந்த வீடியோவிலும் தனது மேல் உள்ள தவறை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. மாறாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடும் தொனியில்தான் பேசியிருந்தார். இது பெரும் கண்டனத்தை பெற்றது. அதேபோல் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை.

விரைவில் செல்கிறார்: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் தத்து எடுத்திருப்பதாகவும் அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த தவறிலிருந்து விஜய் துளிக்கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் அனைவரது கருத்தாக இருக்கிறது.
நெப்போலியன் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகர் நெப்போலியன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்," பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்வதோடு மட்டும் சரி. அதற்கேற்றபடி விஜய் நடந்துகொள்ளவில்லை. இவர் என்ன சாதித்துவிட்டார் என்று இவருக்கு ஒய் பிரிவி பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இவர் தனி விமானத்தில் செல்ல வேண்டும். அரசியலுக்கு அந்துவிட்டால் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும். அரசியல் தலைவர்கள் எல்லாம் அப்படித்தான் இருந்தார்கள். நானும் அரசியலில் இருந்தபோது அப்படித்தான் இருந்தேன்.
விஜய் அப்படித்தான்: அவர் எப்போதுமே யாரிடமும் இறங்கி வந்து பழகமாட்டார். சினிமா துறையில் இருக்கும் அனைவருக்குமே இது தெரியும். எனக்கும் அவருக்கு சில சங்கடங்கள் வந்திருக்கின்றன. 18 வருடங்களுக்கு முன் நடந்தது. அதை மனதில் வைத்து இப்படி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். அவரது படங்களையும் நான் பார்ப்பதில்லை; அவரிடம் நான் பேசுவதும் இல்லை. சினிமா போல் வெறும் பஞ்ச் வசனம் பேசுவது அரசியல் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.
அப்பாவையே சேர்த்துக்கல: அப்பா, மனைவி, மகன் என குடும்பத்தையே அவர் கிட்டக்கூட சேர்த்துக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். அமெரிக்காவில் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். குடும்பத்தையே கவனித்துக்கொள்ளாத அவர் எப்படி மக்களை பாதுகாப்பார்" என்றார். முன்னதாக போக்கிரி பட ஷூட்டிங்கில் விஜய்யை தனது நண்பர்களுடன் சந்திக்க சென்றபோது நெப்போலியனிடம் விஜய் கோபப்பட்டு பேசியதால் இருவருக்கும் மனஸ்தாபம் உண்டானது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











