விடாத கருப்பாய் பிரபலங்களை துரத்தும் கொரோனா...நடிகர் எஸ்.வி.சேகருக்கும் கொரோனா
சென்னை : திரை பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல்வாதி, நாடக கதை எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் எஸ்.வி.சேகர். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.வி.சேகர், 1979 ம் ஆண்டு டைரக்டர் கே.பாலச்சந்தரால் அடையாளம் காணப்பட்டு, நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

முக்கிய நகைச்சுவை நடிகர்
சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தாலும் நாடகங்கள் மீது தீராத காதல் கொண்டிருந்த எஸ்.வி.சேகர் பல மேடை நாடகங்களை தானே இயக்கி நடித்தார். சின்னத்திரையிலும் நகைச்சுவை நாடகங்கள் சிலவற்றை இயக்கி, நடித்தார். ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த எஸ்.வி.சேகர், விசு இயக்கிய சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

சினிமா டூ அரசியல்
பிறகு அரசியலில் நுழைந்த எஸ்.வி.சேகர், தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ.,வாகவும் இருந்துள்ளார். தற்போது பாஜக.,வில் செய்திதொடர்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கடைசியாக 2018 ல் டிராஃபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்தார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த எஸ்.வி.சேகருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகருக்கு கொரோனா
தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு விட்டதால் டாக்டர்களின் அறிவுரையின் பேரில் தான் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் குணமடைய வாழ்த்து
எஸ்.வி.சேகருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது மகன் அஸ்வினும் ஒரு நடிகர் ஆவார். இவர் வேகம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எஸ்.வி.சேகர் தற்போது நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











