Kasthuri: விஜய் நல்ல மனிதருக்கு உதவுங்க.. நடிகை கஸ்தூரி கோரிக்கை!
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து பேசியதால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜனின் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி விஜய்க்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கரூரில், செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் சம்பவம்: இந்த வழக்கில், அக்டோபர் 7ந் தேதி தேதி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து வரதராஜன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், வயது மூப்பு காரணமாக பல பிரச்னைகள் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, காவல்துறை தரப்பில் விவாதித்த வழக்கறிஞர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், நீதித்துறை, அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அவதுாறாக கருத்துகளை பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரதராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
கஸ்தூரி கோரிக்கை: இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வரதராஜனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "திரு விஜய் இந்த நல்ல மனிதருக்கு உதவ வேண்டும். நேர்மையான Ex cop வரதராஜன் அவர்கள், 75 வயதில் சிறையில் தீபாவளியை கழிக்க போகிறார். அவருக்கு தயவு செய்து உதவுங்கள் என பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரியின் பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











