திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பேசிய முதல் வார்த்தை...கணவருடன் பேட்டி அளித்த நயன்தாரா
சென்னை : திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி நயன்தாரா - விக்னேஷ் சிவன் பற்றிய பேச்சுக்கள் தான் மீடியாவிலும், சோஷியல் மீடியாவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video
சும்மாவே இவர்கள் சோஷியல் மீடியாவில் போடும் போஸ்ட்டே வைரலாகி, டிரெண்டாகும். 7 வருடமாக காதலித்து வந்தவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர். அதிலும் பிரம்மாண்டமாக நடந்த திருமணம். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம், அங்கு ஒரு சர்ச்சை என பரபரப்பை கூட்டிக் கொண்டே போகிறார்கள் இருவரும்.
திருமணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், தங்களின் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு, திருமணத்திற்கு பிறகு ஜுன் 11 ம் தேதி நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக கூறி இருந்தார்.

திருமணம் டூ திருப்பதி
ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது. ரஜினி, ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, சரத்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள், போனி கபூர், ரைடக்டர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணம் முடித்த கையோடு நயன்தாராவை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் விக்னேஷ் சிவன்.

அடுத்த நாளே பிரச்சனையா
சாமி தரிசனம் முடிந்த பிறகு கோயிலுக்கு வெளியில் போட்டோஷுட் நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் நயன்தாரா காலில் செருப்பு அணிந்து நடந்து வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறி இருந்தது. இதனையடுத்து கோயில் விஜிலன்ஸ் அதிகாரிகளும் விக்னேஷ் சிவனை தொடர்பு கொண்டு பேசினர். அதன் பிறகு விக்னேஷ் சிவன், திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினார்.

பதறிப் போன நயன்தாரா
தொடர்ந்து சென்னை திரும்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, ஏற்கனவே அறிவித்த படி செய்தியாளர்களை சந்தித்தனர். இதனால் முக்கியமாக ஏதாவது அறிவிப்பு வெளியிட போகிறார்களோ என அனைவரும் எதிர்பார்த்தனர். மவுண்ட் ரோட்டில் உள்ள தாஜ் கிளப் ஹவுசில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் கூட்ட நெரிசலில் முட்டி மோதியதில், ஒருவர் தவறி விழுந்ததை பார்த்த நயன்தாரா பதறிப் போனார்.

நயன்தாரா பேசிய முதல் வார்த்தை
ஒரு வழியாக கூட்டத்தை சமாளித்து வந்து சேர்ந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். விக்னேஷ் சிவன் பேசுகையில், இதுவரை நீங்கள் எங்களுக்கு அளித்து வந்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. இனிமேலும் எங்களின் வாழ்க்கைக்கு உங்களின் ஆதரவு தேவை என்றார். அப்போது குறுக்கிட்ட நயன்தாரா, தேங்க் யூ சோ மச். அனைவரின் அன்பிற்கு நன்றி. இதுவரை எங்களுக்கு அளித்து வந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. இப்போது திருமணமாகி விட்டது. இனியும் எங்களின் வாழ்க்கைக்கு உங்களின் ஆதரவு தேவை என்றார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா பேசிய முதல் வார்த்தையே நன்றி தான்.

விக்கி சொன்ன செம தகவல்
விக்னேஷ் கூறுகையில், இங்கு தான் நயன்தாராவை முதன் முதலில் கதை சொல்வதற்காக சந்தித்தேன். அதனால் தான் இங்கு உங்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க நினைத்தேன். அனைவருக்கும் நன்றி என்றார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு ஜோடியாக நடத்திய இந்த செய்தியாளர் சந்திப்பு போட்டோக்கள், வீடியோக்கள் செம டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











