நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்பணும்.. ரஜினியை தொடர்ந்து கமல் வாழ்த்து!
சென்னை: கேப்டனாக சினிமா உலகையே கலக்கி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அவரது வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளது.
விஜயகாந்துக்கு சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அவரது கால் விரல் அகற்றப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும், தேமுதிக தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனபதிவிட்டு இருந்த நிலையில், தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் விஜயகாந்த் பூரண குணமடைய வாழ்த்தி உள்ளார்.


விஜயகாந்த் கால் விரல் அகற்றம்
நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகின. முதலில் அது வதந்தியாக இருக்கக் கூடாதா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மூன்று ஆண்டுகளாக சிகிச்சை
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக முழு அரசியலில் இருந்து ஒதுங்கி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் விஜயகாந்த். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜயகாந்துக்கு தலைசிறந்த மருத்துவர்களை கொண்டு உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டும் எதிர்பார்த்த அளவில் அவரது உடல்நலனில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. இந்நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது விரல் அகற்றப்பட்டுள்ளது.

கேப்டனாக கர்ஜிக்கணும்
"என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ட்வீட் போட்டுள்ளார். ரஜினியின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கமல் ட்வீட்
இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

நலமுடன் வாருங்கள் கேப்டன்
கமல்ஹாசனின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், விரைவில் நலமுடன் மீண்டு வாருங்கள் கேப்டன் என கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் இணைந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஹேட்டர்களே அதிகம் இல்லாத நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். அரசியலில் நுழைந்ததும் தனது அசுர பலத்தை காட்டியவர். உடல் நலக் குறைவு காரணமாக தற்போது ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் பழையபடி அவர் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











