Anandaraj: என்னைக் குத்தி குத்தி கொலை செய்துவிட்டார்கள்.. கண்ணீர் மல்க பேசிய ஆனந்தராஜ்
சென்னை: "என்னடா துப்பறனேன்னு பாக்குறியா வேற யாரும் துப்பிடக்கூடாதுல்ல.. தோத்துகிட்டே இருக்கியேடா.., அட உங்க அப்பன் தாமிரபரணியில தலை முழுக.., கொஞ்சம் காமெடி பண்ணா வில்லன்ங்கறதையே மறந்துடுறாங்க" என தமிழ் சினிமாவில் பல டிரேட்மார்க் வசனங்களை பேசி நடித்தவர் ஆனந்தராஜ். தொடக்க காலத்தில் வில்லன் இன்னும் சொல்லப்போனால் வில்லாதி வில்லனாக நடித்துக் கொண்டிருந்தவர், இன்றைக்கு காமெடியனாகவும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இப்படி இருக்கும்போது இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி. இந்த படத்தின் புரோமோசன் விழாவில் அவர் பேசும்போது, தனது சினிமா வாழ்க்கை எவ்வளவு சவால்கள் நிறைந்தது என்பது குறித்து பேசியுள்ளார். கண்ணீர்மல்க அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசுகையில், " ஒரு பெரிய நடிகர் தன்னைப் பற்றி, எல்லாம் நானாக கட்டிய வீடு என்று தனது கெரியரை சொல்லும்போது அனைவரும் ரசிப்போம். நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாருமே இல்லை, பின்புலம் கிடையாது, திரையுலகில் முன்னோர்கள் கிடையாது. நான், ஆர்.கே. செல்வமணி, உதயகுமார் என அனைவரும் போராடி வந்தவர்கள்தான். சிறுவயதில் செத்து சுண்ணாம்பு ஆகியுள்ளேன். நடிக்கும்போது பயம் இருக்கும்.

என்னைவிட அதிகம் நேசித்தவர் எனது அப்பா. பார்த்திபன் சாரின் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன், இரவு நேரம் ஆகும் என்று கூறுகிறார்கள், நானும் சரி என்று காத்துக் கொண்டு இருக்கிறேன். அதன் பின்னர் எனக்கு 8.30 மணிக்கே ஷூட்டிங் முடிந்தது என்று கூறுகிறார்கள், நான் பார்த்திபன் சாருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்புகிறேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு கால்ஷீட் வேண்டாம் என்று கூறுகிறார்கள், நானும் சரி என்று சொல்லிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் எனது அப்பா தவறிவிட்டார் என்று போன் வருகிறது.
கண்ணீர்: நான் ஷூட்டிங்கில் இருந்து சீக்கிரமே வந்தது தொடங்கி, இரண்டு நாட்கள் கால்ஷீட் வேண்டாம் என்று அவர்கள் சொன்னது வரை எல்லாம் எனது அப்பாவின் மரணத்திற்கு நான் போகவேண்டும் என்று எனது அப்பா எனக்குச் செய்ததாகத் தான் பார்க்கிறேன். வீட்டுக்குச் சென்று அப்பாவின் உடலைப் பார்த்து நான் கேட்டது, நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எனது படப்பிடிப்புகள் எல்லாவற்றையும் ஃப்ரீ செய்தீர்களா அப்பா என்றுதான் கேட்டேன். இது எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள். இது பெரிய நடிகராக இருந்தால் அது பெரிய விஷயமாக மாறும். நான் ஒரு சராசரி நடிகர். எனக்கு போட்டியே இல்லை என்று நினைக்கிறீர்கள்.

முதுகு முழுக்க வடுக்கள்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் நான் நடிக்க என்னைத் தள்ளியது யார் என்று நினைக்கிறீர்கள்? எனது முதுகு முழுவதும் காயம். ஒரே ரத்தமும் வடுக்களும் தான் உள்ளது. என்னைக் குத்தி குத்தி கொலை செய்துவிட்டார்கள். ஒரு படம் வீட்டிற்கு வந்து பேசுவார்கள், அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டு விடுவேன். அதற்கு அந்த படத்தின் கதாநாயகனோ அல்லது வேறு யாரோ ஒருவர் காரணமாக இருப்பார்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை சார், மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தயவு செய்து கலையை கலையாக பாருங்கள்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











