கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை.. பேட் கேர்ள் பட இயக்குநர் வர்ஷா பளீர் பேச்சு!
சென்னை: வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேர்ட் கேர்ள். இந்த படத்தை வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஒரு சில படத்தை மிகவும் மோசமாக விமர்சித்தனர். படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று எல்லாம் பிரச்னைகள் எழுந்தது. சென்சார் தரப்பில் இருந்து பல காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதால், படக்குழு நீதிமன்றம் சென்று போராடி படத்திற்கு சென்சார் வாங்கி, படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.
இந்நிலையில் படக்குழு இன்று அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் வர்ஷா பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது அவர் பேசுகையில், " இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன சில நாட்களில் நாங்கள் மொத்த படக் குழுவுமே ரோட்டர்டாம் திரைப்படத் திருவிழாவிற்குச் சென்றுவிட்டோம். அப்போது பேர்ட் கேர்ள் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு இங்கு பலரும் கேவலமான குப்பைப் படம் என்று கூறினார்கள்.

ஆனால் ரோட்டர்டாம் திரைப்படத் திருவிழாவில் படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.எனக்கு இந்த இரண்டும் நேரெதிரான உணர்வுகளைக் கொடுத்தது. இயக்குநர் ராம் சார் கூட அவரது படத்தின் கேள்வி நேர பதிலின் போது எங்கள் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ரோட்டர்டாம் திரைப்படவிழாவில் எங்களை அங்கீகரத்ததால் கிடைத்த மன உறுதி என்னை மேலும் தைரியமானவளாக மாற்றியுள்ளது.
மனநிலை சரியில்லாதவர்கள்: நமது ஊரில் மண்ணையும் பெண்ணையும் மதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் தான், இந்த படத்தை தயாரித்த, டிரைலரை ரிலீஸ் செய்தவர்களின் வீட்டு பெண்களின் புகைப்படத்தை மிகவும் கேவலமாக இணையத்தில் பகிர்ந்திருந்தார்கள். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர்களின் அரசியல் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்று. அவர்கள் உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள். பெண்கள் தேர்வு செய்யும் இடத்தில் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பெண்கள் தங்களுக்கு எது வேண்டுமோ அதை தேர்வு செய்வதற்கு தகுதியானவர்கள்.
பாலியல் பண்டம்: பல படங்களில் பெண்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அவர்களில் பலரும் பெண்களை பெண்ணாக படமாக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால் அவர்களை பாலியல் பண்டமாக படமாக்குவதை பார்த்து வருகிறோம். அது கைவிடப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கலாச்சாரம்: எங்க படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு படம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று கூறுகிறார்கள். கலாச்சாரம் தான் பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, பெண்கள் கலாச்சாரத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாச்சாரத்தை காக்க வேண்டிய வேலை எங்களுடையது அல்ல. கடவுளும் கலாச்சாரமும் தான் பெண்களை காக்க வேண்டும்" என்று பேசினார். இவரது பேச்சுக்கு இயக்குநர் வெற்றிமாறன் கை தட்டி தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











