twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பால்கே விருது போல தமிழில் நடராஜ முதலியார் விருது வழங்க வேண்டும்! - பாலு மகேந்திரா

    By Shankar
    |

    Balu Mahendra urges to set up Nataraja Mudhaliyar award
    சென்னை: இந்திய அளவில் பால்கே விருது வழங்கப்படுவது போல, தமிழில் நடராஜா முதலியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார்.

    மலையாள சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'செலுலாய்ட்' என்ற பெயரில் மலையாள இயக்குநர் கமல் இயக்கியுள்ளார்.

    இதில், பிருதிவிராஜ்-மம்தா நடித்துள்ளனர். இந்த படத்தை 'ஜே.சி.டேனியல்' என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர்.

    இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசுகையில், "தமிழ் சினிமாவில் முன்னோடிகளை மதிக்கும் பண்பு குறைந்து வருகிறது. மலையாள சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் ஜே.சி.டேனியல், ஒரு தமிழர். அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், இந்திய சினிமா நூற்றாண்டை பெருமைப்படுத்தும் விதமாகவும், கமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமா சார்பில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

    சினிமாவில் நுழைந்த என்னை 14 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வைத்து வளர்த்து விட்டது, மலையாள சினிமாதான். அந்த நன்றி எனக்கு எப்போதும் உண்டு. மலையாள சினிமா அதன் தந்தை டேனியலை கொண்டாடுவது போல், தமிழ் சினிமா அதன் பிதாமகன் நடராஜ முதலியாரை கொண்டாட வேண்டும்.

    வட இந்தியாவில் பால்கே விருது வழங்குவது போல் தமிழ்நாட்டில் நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்க வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னோடிகளை போற்றும் அதே நேரத்தில், பழைய சினிமா படங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்காக, சினிமா ஆவண காப்பகம் ஒன்றை நிறுவ வேண்டும்.

    இதை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். காரணம், நானே நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் இயக்கிய மூன்றாம் பிறை, மறுபடியும், சந்தியாராகம், வீடு ஆகிய படங்களின் 'நெகட்டிவ்'கள் அழிந்து விட்டன. இதுபோல் பல அரிய படங்களின் 'நெகட்டிவ்'களை நாம் இழந்து வருகிறோம். இந்த இழப்புகளை தடுக்க, உடனடியாக ஆவண காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

    அண்ணா முதல் அம்மா வரை தமிழ்நாட்டை ஆள்பவர்கள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் இதை செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்? இது ஒன்றும் பெரிய பணி அல்ல. ஒரு அலுவலகமும், 10 பணியாளர்களும் போதும்," என்றார்.

    யார் நடராஜ முதலியார்?

    தமிழ் சினிமாவின் தந்தை இவர்தான். வேலூர்தான் இவர் சொந்த ஊர். தமிழின் முதல் படமான கீசக வதத்தை ரூ 35000 செலவில் எடுத்து 1916-ல் ஊமைப்படமாக வெளியிட்டு, அனைவரையும் அதிர வைத்தவர். 1916-ம் ஆண்டு இந்தத் தொகை எவ்வளவு பெரிய தொகை என்பதை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    சென்னையில் வெயில் அதிகம் என்பதால், ஏசி வசதி இல்லாத அந்த நாளில் பெங்களூரில் சொந்தமாக லேப் நிறுவியுள்ளார். பின்னர் வேலூரில் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவி தன் படங்களை அங்கு வைத்து பிரின்ட் போட்டு புரட்சி செய்த சாதனையாளர்.

    1917 முதல் 1921 வரை திரௌபதி வஸ்திரபரனம், மைத்திரேயி விஜயம், லவ குசா, மஹிரவனன், மார்க்கண்டேயன், கலிங்க மர்தனம், ருக்மணி கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார். இந்தப் படங்களின் ப்ராசஸிங் பெரும்பாலும் அவரது வேலூர் ஸ்டுடியோவிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Veteran film maker Balu Mahendra requested the govt to establish Nataraja Mudaliyar award to honour the pioneer of Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X