For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  1965-ல் தமிழை மீட்க... 2017-ல் திமிலை மீட்க!

  By Shankar
  |

  சிதறிக்கிடந்த நம் தமிழனை

  திமிறி எழ வைத்தது

  திமில்..

  உயிரெழுத்து, மெய்யெழுத்து,

  உயிர்மெய்யெழுத்து அத்தனையும்,

  ஆயுத எழுத்தாய் மாற்றியது

  தமிழ்....

  நாடு சேர்க்காததை

  மாடு சேர்த்தது..

  பண்பாடு எனும்

  கலாச்சாரம்தான்

  தமிழனை ஓர் அணியில் கோர்த்தது..

  Bharathiraja statement on Jallikkattu protest

  உரசும் வரை தீக்குச்சி...

  உரசிய பின் நெருப்பு

  தமிழா - நீ நெருப்பு...

  பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்

  பாரம்பரியத்தால் ஒன்றானது...

  ஒருமித்த ஒற்றைக்குரலில்

  ஒற்றுமைக்குத் தமிழன் என்றானது..

  பண்டைய தமிழ் பண்பாட்டை

  ஆண்ட்ராய்டு இளைஞன்

  மீட்டெடுத்தான்....

  கணிப்பொறியில் இருந்தாலும்

  கலப்பைத் தமிழன் என்பதை

  நிரூபித்தான்..

  முன்பு - மனுநீதி கேட்டு

  மன்றாடியது மாடு..

  இன்று மாட்டுக்காக

  நீதிகேட்டு ஒன்றாகியது

  தமிழ்நாடு..

  1947 சுதந்திர போராட்டம்..

  1965-ல் தமிழை மீட்க ஒர் உரிமைக்குரல்..

  2017-ல் திமிலை மீட்க ஓர் அறப்போர்..

  தமிழா - உன் ஒற்றுமை என்னும்

  ஒற்றைத் தீக்குச்சியில் ஒளிரும்

  கலங்கரை விளக்கத்தைப் பார்த்து

  கை கூப்பி நிற்கிறேன்..

  மாணவர்களெல்லாம் மாவீரர்களாய்

  மாநிலம் முழுவதும் குவிந்ததை

  கண்டு மகிழ்ச்சியடைகிறேன்..

  உன் சாத்வீகப் போராட்டம்

  எனக்கு சந்தோசத்தை தந்தாலும்,

  சில புல்லுறுவிகளால்

  சில சங்கடங்களைத்

  தந்திருக்கிறது..

  உன் அறப்போர்

  அகிலத்தையே ஆட்டி வைத்தாலும்

  உன் தடத்தில் சில தவறானவர்கள்

  தடம் பதித்திருக்கிறார்கள்...

  நீ தேர்ந்தெடுத்த அரசாங்கம்

  உன் சொற்படிக்கேட்டு

  டெல்லிவரை சென்று வந்தது...

  நீதியின் கைகளிலிருந்த

  பேனாவைப் பிடுங்கி

  தமிழர்களே தீர்ப்பெழுதியிருக்கிறார்கள்...

  இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த

  முதல் வெற்றி...

  மக்களுக்குத்தான்

  சட்டமேயொழிய,

  சட்டத்திற்கு

  மக்களல்ல என்பதை

  இந்தத் தீர்ப்பு,

  சாட்சி சொல்லியிருக்கிறது...

  உன் ஆணித்தரமான அகிம்சை சம்மட்டியடி

  அரசியல்வாதிகளை ஆட்டம் காண

  வைத்திருக்கிறது என்பதை

  நீயே உணருகிறாய்...

  உன் பாரம்பரியத்தை

  பாரதத்தாயே ஆதரித்து விட்டாள்..

  அவசரச் சட்டம்

  சில நாட்களில்

  நிரந்தரமாக்கப்படும்...

  இல்லையேல்,

  உன் உரிமைச்சங்கை

  மறுபடியும் நீயே ஊதலாம்...

  மாணவர்களே,. தமிழர்களே..

  அகிம்சைப் புரட்சியின் மூலம்

  தமிழகத்தை மீண்டும் அகிம்சை நாடு

  என்பதைக் ஆணித்தரமாக

  சொல்லியிருக்கீறீர்கள்..

  வன்முறையென்ற வார்த்தை

  நம் தேச வரைபடத்திலிருந்தே

  விலக்கி வைக்கப்பட்டுள்ளது..

  ஆனால்.. உன் வெற்றியின் வெளிச்சத்தில்

  சில இருட்டுகள் விலாசம்

  தேடுகின்றன...

  உன் விரல் பிடித்துக்கொண்டு

  சில விபரீதங்கள் வினையை

  விதைக்கின்றன...

  தமிழா - நீ வெற்றி பெற்றுவிட்டாய்..

  இன்னும் ஏன் போராட்டம்..?

  இந்த ஒற்றுமைக் கூட்டத்தை

  சில தீய சக்திகள் தவறாகச்

  சித்தரிக்கச் சிந்திக்கின்றன..

  உரிமைக்காக உயிரைக் கொடுக்கத்

  தெரிந்த தமிழனுக்கு,

  ஊடுருவலை முறியடிப்பது

  பெரிய விசயமில்லை..

  விழித்துக்கொள் தமிழா..

  வீரமிகு மாணவனே..

  உன் எழுச்சிப் புரட்சிக்கு மீண்டும்

  என் நன்றி..

  வாடிவாசல் திறக்கப்பட்டது..

  திமிறி எழுகின்றன காளைகள்..

  பண்பாடு மீட்கப்பட்டது..

  புன்னகையோடு புலரும்

  இனி வரும் காலைகள்..

  இனி நீயே எழுதலாம்

  புதிய வரலாறு..

  நம் ஒற்றுமைக் கைகள்

  ஒன்று சேர்ந்து ஏற்றட்டும்

  குடியரசு தினத்தில் தேசியக்கொடி...

  ஜனவரி 26-ல்

  ஏற்றப்படும் நம் தேசியக்கொடி,

  இந்தியனின் வெற்றிக்கொடியென்று

  கொண்டாடுவோம்..

  இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

  உன் வீரத்தோள்கள் மீது

  சில கருப்பு ஆடுகள் ஏறியிருக்கின்றன..

  இந்திய இறையாண்மைக்கு

  எதிராய்- சில எதிரிகள்

  நம்மோடு கலந்திருக்கிறார்கள்

  அது நம் கண்களுக்கு தெரியவில்லை..

  பண்பாட்டை மீட்டெடுக்கச்

  சேர்ந்த நம் கூட்டத்தில்

  பாரதத்தைத் துண்டாட

  எவனோ நம்மோடு

  கைகோர்த்திருக்கிறான்..

  ஏற்றப்படும் தேசியக்கொடியில்

  எவனோ தீவிரவாதத்தைத்

  திணித்திருக்கிறான்..

  உன்னைச் சாட்சியாய் வைத்து

  எவனோ கலவரங்களைக்

  கட்டவிழ்க்கிறான்..

  நம் தோள்மீதே ஏறிக்கொண்டு

  எம் தோழர்களைத் துப்பாக்கி

  முனைக்குப் பலியாக்க நினைக்கிறான்..

  தமிழா..

  இந்திய விடுதலைக்கு முதன் முதலாய்

  வித்திட்ட வீரனே..

  உடனிருந்து உரிமையை மீட்பதாய்

  கோஷம் போட்டுவிட்டு,

  உள்ளிருந்தே நமக்குக் குழி

  பறிக்கும் ஆட்களைக் கண்டுபிடி..

  உன் திறமையைத் திசை திருப்பிக்

  கலவரங்களை ஏற்படுத்தும்

  கருப்பு முகத்திரையைக் கிழித்தெறி..

  சாத்வீக முறையில் நடந்த

  பேரணியை,

  சண்டையாய் மாற்றியவன்

  எவன்..?

  வில், வாள், அம்பு, கத்தி, அரிவாள்,

  துப்பாக்கி எல்லாம் வைத்திருந்தும்

  அன்பைச் சொன்னது நம் தமிழர் கூட்டம்..

  இதில் எவனவன் வன்முறையை

  விதைத்தது..

  கண்டு கொள் தமிழா..

  வெகுண்டெழு நம் மண்ணின் மைந்தனே..

  குடியரசு தினத்தில்

  நம் ஒற்றுமைக் குரலே

  ஓங்கி ஒலிக்கட்டும்..

  இந்திய தேசியக் கொடியை

  நம் கைகளே - நிமிர்ந்து

  ஏற்றட்டும்..

  நம் தலைமைக்குப் பெயர்

  தமிழ்..

  மீண்டது,

  திமில்..

  அன்புடன் பாரதிராஜா

  English summary
  Director Bharathiraja's letter to students community who fought for Jallikkattu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X