பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் சர்ச்சைகள்...முந்தைய சீசன்கள் ஓர் அலசல்
சென்னை : கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று துவங்கப்பட்டது. பிரம்மாண்டமாக ஐந்து மணி நேர நிகழ்ச்சியாக நடைபெற்றது பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவக்க விழா. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இதற்கு முன் நடந்து முடிந்த நான்கு சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி, அப்பா - மகன் அல்லது மகள் உறவு, சண்டை போட்டு பரபரப்பை கிளப்ப இருவர் என இருந்தார்கள். முந்தைய சீசன்களின் போட்டியாளர்களில் பலர் சர்ச்சையில் சிக்கியே பயங்கர பிரபலமாகி உள்ளனர். அப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் இதற்கு முன் நடந்த சர்ச்சைகள், பரபரப்புக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆரவ் தந்த மெடிசினல் கிஸ்
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா - ஆரவ் இடையே காதல் உருவானதாக கூறப்பட்டது. இவர்களின் உறவு பற்றி பல வதந்திகள் பரவின. இந்த சீசனில் ஓவியாவை ஆரவ் முத்தமிட்டது பெரும் சர்ச்சையானது. அதை மெடிசனல் கிஸ் என்ற பெயரில் நியாயப்படுத்தினார் ஆரவ். இதை கமல் கூட, அதென்ன மெடிசனல் கிஸ் இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே என அப்போது கிண்டல் செய்தார்.

பாதியில் வெளியேறிய ஓவியா
நெருக்கமான காதலர்களாக இருந்த ஓவியாவும், ஆரவ்வும் திடீரென சண்டை போட்டுக் கொண்டனர். இந்த சண்டையால் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார் ஓவியா. பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, ஓவியா இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

தப்பிக்க முயன்ற பரணி
பிக்பாஸ் முதல் சீசனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து செல்ல முயன்றார் நடிகர் பரணி. சக போட்டியாளர்களால் தான் மனரீதியாக பல வகையிலும் துன்புறுத்தப்பட்டதாலேயே வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றதாக கூறினார். இதனால் மற்ற போட்டியாளர்களை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருந்தாலும் விதிகளை மீறியதால் பரணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

மகத் - யாஷிகா காதல்
பிக்பாஸ் சீசன் 2 ல் மகத் ராகவேந்தரை காதலிப்பதாக யாஷிகா ஆனந்த் கூறினார். இதனால் மகத்தின் காதலி பிரச்சி மிஷ்ராவிற்கும், மகத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருந்தாலும் யாஷிகா தனது காதலில் உறுதியாக இருப்பதாக கூறினார். காதலியுடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு யாஷிகாவுடன் நெருக்கமாக பழகுவதை மகத் குறைக்கவில்லை. அது பெரிய சர்ச்சையை கிளப்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பிறகு காதலியை சமாதானப்படுத்தி, மீண்டும் இணைந்த மகத், காதலியை 2020 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தலையில் குப்பை கொட்டிய ஐஸ்வர்யா
பிக்பாஸ் சீசன் 2 ல் ஐஸ்வர்யா தத்தா, டாஸ்க் ஒன்றின் போது தான் சொன்னதை கேட்காததால் சக போட்டியாளரான தாடி பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டினார். இது பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் கிளப்பியது. ஐஸ்வர்யாவின் அந்த செயலை சோஷியல் மீடியாவில் பலரும் வருத்தெடுத்தனர்.

கையை வெட்டிக் கொண்ட மதுமிதா
பிக்பாஸ் சீசன் 3 ல் ஆரம்ப முதலே ஜாங்கிரி மதுமிதாவிற்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கருத்து மோதல் இருந்து வந்தது. தமிழ் கலாச்சாரம் பற்றி மதுமிதா பேசிய கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியது. காவேரி நீர் பிரச்சனை தொடர்பாக மதுமிதா கூறிய கருத்து சர்ச்சையானது. இதை நியாயப்படுத்த முயன்று, அதற்காக மதுமிதா கையை வெட்டிக் கொண்ட விவகாரம் பரபரப்பை உருவாக்கியது. இதனால் மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஷெரின் - வனிதா மோதல்
பிக்பாஸ் சீசன் 3 ல் ஷெரின் - தர்ஷன் இடையேயான உறவு பற்றி வனிதா தவறாக பேசியது பெரும் விவாத பொருளானது. இதனால் ஷெரின் - வனிதா இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இவர்களின் சண்டையால் வீடே ரெண்டானது.

அதிர்ச்சி தகவல் சொன்ன சரவணன்
பிக்பாஸ் சீசன் 3 ல் வார இறுதி எபிசோடில் கன்ஃபஷன் ரூமில் பேசிய சரவணன், கூட்டமான பஸ்களில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாக கூறியனார். இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. சரவணனின் இந்த சர்ச்சை கருத்தை பெண்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீஸ்
பிக்பாஸ் சீசன் 3 ல் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் வனிதா விஜயக்குமார். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் இருந்த போது, அவரின் முன்னாள் கணவர், தனது மகளை வனிதா கடத்தி வந்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கவின் - லாஸ்லியா காதல்
பிக்பாஸ் சீசன் 3 ல் கவின் - லாஸ்லியா இடையேயான காதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. போட்டியாளர்கள் அனைவரும் கவினுக்கு அட்வைஸ் செய்தது, வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் லாஸ்லியா மீது கடும் கோபத்தை காட்டியது, கவின் குற்ற உணர்ச்சிக்கு ஆளானது என மிகப் பெரிய பரபரப்பை கிளப்பியது. இருவரும் டைட்டில் வெல்லவில்லை என்றாலும் தற்போது பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார்கள்.

சனம் ஷெட்டி - சுரேஷ் சக்கரவர்த்தி மோதல்
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி, தவறுதலாக சனம் ஷெட்டியை டாஸ்க்கின் போது தலையில் தட்டினார். வேண்டுமென்றே இதை செய்யவில்லை என சுரேஷ் கூறினாலும், அது மிகப் பெரிய சண்டையானது. சனம் ஷெட்டியும் சுரேஷ் சக்கரவர்த்தியை மரியாதை குறைவாக பேசினார். அது அவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தன்னை வெளியேற்றும்படி கேட்டு, கன்ஃபஷன் ரூமில் பிக்பாசிடம் கதறி அழுதார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பாலாஜி - சனம் ஷெட்டி மோதல்
பிக்பாஸ் சீசன் 4 ல் அனைவருடனும் சண்டை போட்ட நபர் என்றால் அது பாலாஜி தான். மிஸ்டர் இந்தியா டைட்டில் வென்ற பாலாஜி, மிஸ் செளத் இந்தியா பட்டத்தை சனம் ஷெட்டி வென்றதை டுபாக்கூர் என கூறினார். அதே போல் பலமுறை யூஸ்லெஸ் என திட்டினார். இதனால் பலமுறை சனம் ஷெட்டி - பாலாஜி இடையே சண்டை ஏற்பட்டது.

சுரேஷ் சொன்ன அந்த வார்த்தை
செய்திவாசிப்பாளர்கள் பற்றிய சுரேஷ் சக்கரவர்த்தி சொன்ன கருத்தால் ஆரம்பம் முதலே அனிதா சம்பத்திற்கும் அவருக்கும் மோதலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜையின் போது சுமங்கலி என்ற வார்த்தையை சுரேஷ் சக்கரவர்த்தி பயன்படுத்தியதை அனிதா எதிர்த்தார். அது கணவனை இழந்த பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என அனிதா கூறியதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

பாலாஜி - ஆரி மோதல்
சிறையில் இருந்த போது பாலாஜியை ஆரி சோம்பேறி என விமர்சித்தார். இதனால் கோபப்பட்ட பாலாஜி மைக்கை கழற்றி எறிந்து, ஆரியை முட்டாள், இடியட் என கண்டபடி திட்டினார். இவர்கள் இருவரிடையேயான மோதல் கிட்டதட்ட போட்டி முடிவதற்கு சில வாரங்கள் இருக்கும் போதே தீர்ந்தது. இவர்கள் இருவரிடையேயான மோதல், சீசன் முழுவதையும் பரபரப்பாக்கியது.


Click it and Unblock the Notifications











