பிக் பாஸ் தமிழ் சீசன் 4 டீசரில் உள்ள ரகசியம்.. இந்த மேட்டர் தான் ஹாட் டாப்பிக்கா இருக்க போகுதாம்!
சென்னை: எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி ஹைப்பும் இன்றி தடாலடியாக பிக் பாஸ் தமிழ் 4 சீசன் பற்றிய புரொமோ டீசர்கள் வருவதை கவனித்திருப்பீர்கள்.
அதற்கு ஒரு சிறப்பான காரணமும் இருக்கிறதாம். மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விட இந்த முறை இன்னமும் சுவாரஸ்யத்தைக் கூட்ட பிக் பாஸ் தமிழ் குழு ஏகப்பட்ட முயற்சிகளில் இறங்கி உள்ளது.
ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் அந்த ஒரு விஷயத்தை வைத்துத் தான் நகரப் போகிறது என்கிற ரகசியம் நேற்று இரவு வெளியிடப்பட்ட பிக் பாஸ் புரொமோ டீசரை உற்று கவனித்தால் புரியும்.

துள்ளலுடன்
மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்த சந்தோஷத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை இந்த புரொமோ டீசரில் துள்ளலாக ஆட வைத்து அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த காட்சியே தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாகவும் சந்தோஷத்தையும் கொடுத்தது. மற்ற பிக் பாஸ் சீசன்களை விட இன்னமும் கூடுதல் எனர்ஜியுடன் இதில் கமல் காணப்படுகிறார்.

அதுவும் இருக்கு
2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நடிகர் கமல், கடந்த மூன்று சீசன்களிலும் செய்த அதே அரசியல் பிரச்சாரங்களை இந்த முறையும் இன்னமும் ஆழமாகவும் அழுத்தமாகவும் செய்ய உள்ளார் என்பது தெரிகிறது. அதற்கான மேடையை எந்த ஒரு தங்கு தடையின்றி எப்போதோ விஜய் டிவி நிர்வாகம் உருவாக்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

திடீர் சர்ச்சைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சி அறிவிப்பு வருவதற்கு முன்பாக அதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சைகளை உருவாக்கி டிரெண்டாகி வருகின்றனர். இது எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர்களை தயார் படுத்திக் கொள்ளவே என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. சீரியல் நடிகைகள் ஷிவானி, விஜே சித்ரா சண்டையும் அதற்குத்தானா?

ஹாட் டாப்பிக்
உலகத்தையே ஆட்டிப் படைத்துள்ள கொரோனா வைரஸ் தான் இந்த சீசனின் ஹாட் டாப்பிக்காக இருக்கப் போகிறது என்கிற ரகசியம், நேற்று வெளியிடப்பட்ட புரொமோ டீசரின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. வணக்கம் வைத்தல், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது போன்ற டாஸ்க்குகளும் பிக் பாஸ் இல்லத்தில் களைகட்டும் என்றே தெரிகிறது.

இப்படித்தான் பேச்சு இருக்கும்
கடந்த 4 மாதங்களாக கொரோனாவால், யார் யார் எப்படி பாதிக்கப்பட்டார்கள், யார் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பை சந்தித்தனர். எந்தவொரு சுப காரியத்துக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே அகப்பட்டு கிடந்தது. குழந்தைகளின் தொல்லை, நல்லா டிரெஸ் பண்ணாம நைட்டி மற்றும் லுங்கி உடைகளிலேயே பொழுதை கழித்த தருணங்கள் எல்லாம் முதல் இரு வாரங்களுக்கான செமி ஸ்க்ரிப்டாக இருக்கும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.

எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சிகளில் இவர்கள் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற அனுமான லிஸ்ட் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டிக்டாக் இலக்கியா, ஷிவானி, விஜே சித்ரா, புகழ், அமுத வாணன், கிரண், பூனம் பஜ்வா, ஷில்பா மஞ்சுநாத், ஸ்பெஷல் என்ட்ரி வனிதா விஜயகுமார் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வருகிறது. விரைவில் யார் அந்த 15 போட்டியாளர்கள் என்பது உறுதியாகிவிடும். அடுத்த மாதம் அக்டோபர் 4ம் தேதி நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











