நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்விக்கு காரணம் வடிவேலுவின் விதி தான்.. நகைச்சுவை நடிகர் பேட்டி!
சென்னை : வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு காரணம், விதி தன் வேலையை சரியாக செய்துள்ளது என நகைச்சுவை நடிகர் முத்துக்காளை தெரிவித்துள்ளார்.
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் ஷிவாங்கி, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, முனிஷ்காந்த், மனோபாலா, லொள்ளுசபா மாறன், ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

நடிகர் வடிவேலு
நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலுவின் நடிப்பில் நீண்டநாட்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலுவை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள். இத்திரைப்படம் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் படம் தோல்விப்படமாக அமைந்தது.

நெகட்டிவ் விமர்சனம்
லைகா நிறுவனம் தயாரித்திருந்த படம் வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கின. இதனால் படம் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் ஜனவரி 6ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தோல்விக்கு காரணம் வடிவேலுவின் விதி தான்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்தது குறித்து பேசிய நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, விதி தன் வேலையை சரியாக செய்தது என்று தான் சொல்லவேண்டும், நாங்க வடிவேலுக்கூட நடிக்கும் போது, அவர் நன்றாக வரவேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்று நினைத்துத்தான் நாங்கள் அவருடன் நடித்தோம். ஆனால், இப்போது இருப்பவர்கள் தான் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துத்தான் அவருடன் நடித்தார்கள் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

நல்லதை மக்கள் ரசிக்கிறார்கள்
அதுமட்டுமில்லாமல், நாம் நடித்ததைத்தான் பார்த்து ஆக வேண்டும் என்ற கட்டாயம் மக்களுக்கு கிடையாது. யாராக இருந்தாலும், தூக்கியெறியக்கூடிய மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள், நல்லதை மக்கள் ரசிக்கிறார்கள் என்றார். யோகிபாபு குறித்து பேசிய முத்துக்காளை, நம்பிக்கையும் திறமையும் இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு யோகிபாபு ஒரு முன் உதாரணம் என்றார்.


Click it and Unblock the Notifications