கேப்டனுக்கு அப்புறம் விஜய் எல்லாம் இல்லை.. லெஜண்ட் தான்.. பிரபலத்தின் பேச்சால் சலசலப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்து இவர் தான் என பலரும் பேசிக் கொண்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பேச்சுக்கள் அடங்கிவிடும். காரணம் ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால், அந்த பேச்சுக்களை எல்லாம் விட்டுவிட்டு அமைதியாக அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள் ரசிகர்கள். ஆனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து சில சினிமா பிரபலங்களை ரசிகர்கள் வரிசைப்படுத்துவது உண்டு.
அந்த வகையில் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர், எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி, 13 ஆண்டுகள் அவர் மறையும் வரை ஆட்சியில் இருந்தார். அதன் பின்னர் தான் திமுக ஆட்சியைப் பிடித்தது. அந்த 13 ஆண்டுகளும் திமுகவின் தொண்டர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

திமுகவுக்கு எப்படி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சவாலாக இருந்தாரோ, அதேபோல் திமுகவுக்கு சவாலாக மாறியவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை தொடங்கியது மட்டும் இல்லாமல், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, பிரதான எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார். இது மட்டும் இல்லாமல், திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் டெபாசிட் இழக்க முக்கிய காரணமாக மாறினார்.
சினிமா - அரசியல்: இப்படி இருக்கும்போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு பல நடிகர்கள் வந்துள்ளார்கள். சரத்குமார், கார்த்தி, கமல்ஹாசன் என இந்த வரிசை நீளும். இதில் புதிய வரவு, தளபதி விஜய். இன்றைய தமிழ் சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் தான். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, இரண்டு மாநில மாநாடுகள் நடத்தி முடித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் 234 தொகுதிகளிலும் களமிறங்க தயார் ஆகி வருகிறார்.

கேப்டனுக்கு அடுத்து யார்?: அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் வரிசையில் தளபதி விஜய் இடம் பெறுவார் என விஜய்யின் ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு: அதாவது, " மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த், நடிகர் லெஜெண்ட் சரவணா புகைப்படங்களை ஒரே பிரேமுக்குள், வைத்துக் கொண்டு, எனது வீட்டிற்கு வந்தால் கூட நான் சாப்பிட்டுவிட்டு தான் போகச் சொல்வேன். 100 பேர் வந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் போங்க என்ற மனிதநேயத்துடன் இருக்கிறார். இப்போது கூட நீங்கள் நினைக்கலாம், சரவணா ஸ்டோருக்கு நான் போனால், கட்டைப் பை கொடுப்பார்கள் அதற்காக கூல் சுரேஷ் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார் என்று. நான் பல இயக்குநர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் யாருக்கும் நன்றி இல்லை. கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டனுக்கு பின்னர், இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் லெஜெண்ட் சரவணன் அவர்கள்தான். இன்னும் ஒரு ஆண்டில் மாமனிதனாக லெஜெண்ட் அவர்கள் வருவார்கள்" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











