நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பின் சகோதரர் கைது
திருவனந்தபுரம் : நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்களை வைத்திருந்த நடிகர் திலீப்பின் தம்பி அனூப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை காரில் கடத்தப்பட்டு, மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிரவைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப்பிற்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.

ஜாமினில் வந்த திலீப்
திலீப் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டனர். நடிகையை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதை வீடியோவாகவும், போட்டோவாகவும் பதிவு செய்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்ததே திலீப்பின் இரண்டாவது மனைவி காவியா மாதவன் தான் என்று கூட சொல்லப்பட்டது. இந்த வழக்கில் திலீப் கடும் போராட்டத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

வர்ணனையுடன் மாற்றப்பட்ட வீடியோ
திலீப் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தங்களின் மொபைல் போன்களை கோர்ட்டில் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி திலீப்பின் சகோதரர் அனூப்பின் மொபைல் போனை ஆய்வு செய்த போது, அதில் நடிகை பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த வீடியோவில் நொடிக்கு நொடி வர்ணனையுடனும் இருந்துள்ளது. இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திலீப்பின் சகோதரர் கைது
இது பற்றி அனூப்பிடம் விசாரித்த போது, தனது தரப்பு வழக்கறிஞர் சொன்னதால் வழக்கிற்கு தேவைப்படும் என்பதற்காக வீடியோவில் வர்ணனை சேர்த்ததாக கூறினார். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தனது வாதத்தில், நடிகை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வீடியோ கோர்ட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எதிராக மட்டும் போட்டு காட்டப்பட்டுள்ளது. கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ இவருக்கு எப்படி கிடைத்தது, அதில் எவ்வாறு வர்ணனை சேர்த்திருக்க முடியும் என வாதிட்டுள்ளனர்.

விசாரணையை தொடர அனுமதி
இதனால் இந்த சம்பவம் தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இவர்கள் பகிர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக அனுப்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். அதோடு நடிகை தாக்கப்பட்ட வீடியோவும் திலீப்பின் மொபைல் போனில் உள்ள மெமரி கார்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த வழக்கு முடிக்கப்படாமல் உள்ளது. வழக்கை முடிக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுப் போனில் இருந்த கைப்பற்றப்பட்ட வீடியோ தொடர்பாக விசாரணையை தொடர போலீசார் கேட்ட அனுமதியை ஏற்றுள்ளது கோர்ட்.


Click it and Unblock the Notifications











