»   »  கதை சொன்னபோது இயக்குநர் மரணம்

கதை சொன்னபோது இயக்குநர் மரணம்

Subscribe to Oneindia Tamil
Shoban
ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் சோபன், நடிகை பூமிகாவுக்கு நேற்று கதை சொல்லிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவிடம் உதவியாளராக இருந்தவர் சோபன். அவரிடம் பல வெற்றிப் படங்களுக்கு உதவியாளராக இருந்துள்ளார். க்ஷ்னம், க்ஷ்னம் என்ற ராம் கோபால் வர்மாவின் படத்தில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர சங்கர்தாதா ஜிந்தாபாத், ஒக ராஜா ஒக ராணி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு காமெடி நடிகரும், டிவி தொகுப்பாளருமான லட்சுமிபதியின் சகோதர் சோபன். சோபன் முதன் முதலில் இயக்கிய படம் மகேஷ்பாபு நடித்த பாபி. இப்படம் பெரும் ஹிட் ஆனது. இதையடுத்து ரவி தேஜாவை வைத்து சண்டி என்ற படத்தை இயக்கினார். இதுவும் சூப்பர் ஹிட் ஆனது.

ஆனால் இந்த இரு படங்களையும் விட மிகப் பெரிய ஹிட் ஆன படம் வர்ஷம். திரிஷா, பிரபாஸ் நடிப்பில் உருவான இப்படம் மிகப் பெரும் ஹிட் படமானது. இந்தப் படம்தான் தமிழில் மழை என்ற பெயர் ஜெயம் ரவி, ஷ்ரியா நடிப்பில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்புதான் கன்னடப் படம் ஒன்றின் வேலைகளைத் தொடங்கியிருந்தார் சோபன்.

38 வயதாகும் சோபன், தனது அடுத்த படத்தின் கதையை நடிகை பூமிகாவிடம் சொல்வதற்காக ஹைதராபாத், மாதபூரில் உள்ள பூமிகாவின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றிருந்தார்.

பூமிகாவிடம் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த பூமிகாவும், அவரது கணவர் பரத் தாக்கூரும், உடனடியாக சோபனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மாதபூரில் உள்ள இமேஜ் மருத்துவமனைக்கு சோபன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே சோபனின் உயிர் பிரிந்து விட்டது.

சோபனின் மரணத்தால் தெலுங்குத் திரையுலகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. வளர்ந்து வந்த இயக்குநரான சோபனின் மரணம் தெலுங்குத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோபன் மரணம் குறித்து பூமிகா கூறுகையில், இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் கூட நான் மீளவில்லை. சோபனைக் காப்பாற்ற எனது கணவர் தீவிரமாக முயன்றார். ஆனால் எங்களால் முடியாமல் போய் விட்டது. மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார் பூமிகா சோகத்துடன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil