இயக்குனர் பொன்முடி நடிக்கும் புதுப்படம்.. என்ன கதை, என்ன ஸ்பெஷல்னு தெரியுமா?
சென்னை: உழைப்பின் மகத்துவத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள ஜி எனும் தமிழ் திரைப்படம் உலக அரங்கில் பல்வேறு விருதுகளை குவித்து சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தை சுரேஷ்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக இயக்குனர் பொன்முடி நடித்துள்ளார். இவர் சோம பான ரூப சுந்தரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ஆவார். மேலும் பீச்சாங்கை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவர் வாழ்வில் உழைத்து எப்படி முன்னேறுகிறார் என்பது தான் படத்தின் கதை.
இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் நாயகன் பொன்முடி சிறந்த நடிகருக்காக ஆறு விருதுகளை வென்றுள்ளார். இதுவரை 26 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

கலை வாரிசு
இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள பொன்முடி திருமலைசாமி, நிறைய குறும்படங்கள், மேடை நாடகங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார். இவரது தந்தை திருமலைசாமியும் 70களில் தமிழ் திரையுலகில் இயக்குநராக இருந்தவர் தான். இவரது அம்மா லட்சுமியும் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர் சோமுவிடம் பணிபுரிந்தவர்.

முதல் ஸ்டண்ட் உமன்
முதல் ஸ்டன்ட் உமன் என்ற பெருமைக்குரிய லட்சுமி, ஹேமாமாலினி, ஜீனத் போன்ற நடிகைகளுக்கு சண்டைக்காட்சிகளில் டூப் போட்டவர். சோலே மா போன்ற பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அப்பாவும், அம்மாவும் திரைத்துறையில் இருந்தவர்கள் என்பதால், பொன்முடிக்கும் அத்துறையில் தானாகவே ஈர்ப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் பிரபலம்
தமிழ் சினிமாவில் பையா, கருங்காலி, அரவான், மிரட்டல் போன்ற படங்களிலும், மலையாளத்தில் வைடூரியம், மா உள்ளிட்ட படங்களிலும், எடிட்டர் லெனின் இயக்கிய ஆங்கில படத்திலும் நடித்திருக்கிறார் பொன்முடி. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர் விருது வாங்கியவர். பிக் பாஸ் பிரபலம் நடிகை ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்த சோம பான ரூப சுந்தரன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து உள்ளார் பொன்முடி.

நடிப்புப் பயிற்சி
கடந்த 22 ஆண்டுகளாக தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் பொன்முடி, 13 ஆண்டுகளுக்கு முன் தானாகவே கலைக்கூடம் ஒன்றைத் தொடங்கி, இதுவரை சுமார் 150 மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்துள்ளார். இப்போது அந்த மாணவர்கள் திரைத்துறையில் பல துறைகளில் சாதித்து வருவதாக பெருமையாகக் கூறுகிறார் பொன்முடி.

வரலட்சுமிக்கு வில்லன்
படம் குறித்து பொன்முடி கூறுகையில், "இதுவரை 20க்கும் மேற்பட்ட சமுதாயம் சார்ந்த நல்ல கருத்துக்களை சொல்லும் குறும் படங்களில் நடித்திருக்கிறேன், இயக்கியும் இருக்கிறேன். தற்போது கோயம்புத்தூரில் கோட்டா இயக்கத்தில் வி3 என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடித்துள்ளார்.

விருதுக்கான படைப்பு
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு கிராமம் சார்ந்த ஒரு சைக்கிளையும், சிறுவனையும் கதைக்களமாகக் கொண்ட புதிய படத்தை பொன்முடி இயக்குகிறார். கதாநாயகன்-கதாநாயகி இல்லாமல் தயாராகும் இப்படத்தை தனது கலைக்கூடத்தின் மாணவர்களோடு சேர்ந்து உருவாக்குகிறார் பொன்முடி. இந்தப்படமும் ஜி படம் மாதிரியே உலக சினிமா ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்" என பொன்முடி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

விரைவில் ரிலீஸ்
இப்போது அவர் நாயகனாக நடித்துள்ள ஜி படம் விருதுகளுக்காகவே எடுக்கப்பட்ட படம் ஆகும். இயக்குநர் எம்.சுரேஷ் இயக்கியுள்ள இப்படம் இதுவரை 26 விருதுகளை பெற்றுள்ளது. இண்டர்நேஷனல் பெஸ்ட் ஆக்டர் என்ற விருதையும் இப்படத்திற்காக பொன்முடி பெற்றுள்ளார். பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்து வரும் இந்த ஜி படத்தை விரைவில் எல்லோரும் பார்த்து மகிழும் வகையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











