»   »  பளு தூக்கும் ஏழை வீராங்கனை குடும்பத்துக்கு சசிகுமார் செய்த பேருதவி!

பளு தூக்கும் ஏழை வீராங்கனை குடும்பத்துக்கு சசிகுமார் செய்த பேருதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனையின் குடும்பத்துக்கு பெரும் உதவி செய்துள்ளார் இயக்குநரும் நடிகருமான சசிகுமார்.

சேலம் தாதகாபட்டியைச் சேர்ந்த தொழிலாளி கண்ணன். இவரது மகள்கள் பத்மாவதி, நந்தினி, அபிராமி. மூவருமே பளு தூக்கும் விளையாட்டு வீராங்கனைகள். மாநில அளவில் பல சாதனைகள் செய்தாலும், வறுமை காரணமாக தேசிய அளவில் விளையாட முடியவில்லை.

Director Sasikumar's big help to poor weightlifting girls

இதுகுறித்த செய்தியை நாளிதழ் மூலம் அறிந்து தாமாகவே முன்வந்து வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் இயக்குநர் சசிகுமார்.

இதுகுறித்து கத்துக்குட்டி பட இயக்குநர் இரா சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலிலிருந்து... :

"சில தினங்களுக்கு முன் நாளிதழில் ஒரு செய்தி. பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் சாதிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வறுமையின் பிடியில் அல்லாடுவது குறித்த செய்தி அது.

'நல்லா சாப்பிட்டாதான் விளையாட்டில் சாதிக்க முடியும். ஆனா, எங்க பொண்ணுங்களுக்கு முட்டை வாங்கிக் கொடுக்கக்கூட காசு இல்லை' என அந்தக் குடும்பத்தினர் கதறி இருந்தார்கள். 100 ரூபாய் சம்பளத்துக்காக அந்த சகோதரிகள் பால் ஊற்றும் வேலை பார்க்கிறார்கள் என எழுதி, புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். வருத்தத்தோடு படித்தாலும் நம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரம் பிரச்னைகளோடு அதையும் ஒன்றாக்கி மறந்துவிட்டேன்.

இரண்டு நாட்கள் கழித்து அதே நாளேட்டைப் புரட்டினால், அனைத்துப் பக்கங்களிலும் அந்த ஏழைக் குடும்பத்தின் செய்தியே இடம் பெற்று இருப்பதுபோல் ஒரு பிரமை. வாசிக்க முடியாத தடுமாற்றம். பேப்பரை மூடி வைத்துவிட்டு அந்தக் குடும்பத்தின் நம்பர் தேடிப் பேசினேன்.

அந்த வீராங்கனைகளின் அப்பா கண்ணன் போன் எடுத்தார். "பெரிசா ஏதும் உதவி கிடைக்கலை சார்...," என ஆரம்பித்து அவர் கண்ணீர் நீள, என்னைப் போலவே எல்லோரும் அந்தச் செய்தியை சாதாரணமாகக் கடந்து போயிருக்கிறார்கள் எனப் புரிந்தது.

என் ட்விட்டர் பக்கத்தில் அந்தக் குடும்பத்தின் வேதனை குறித்து எழுதினேன். நடிகர்கள் சசிகுமார், விஷால் உள்ளிட்டவர்கள் கவனத்துக்கும் கொண்டு போனேன்.

இதற்கிடையில் தேனியில் தொடர் படப்பிடிப்பில் இருந்த சசிகுமார் சார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் என் பதிவுக்குப் பதில் அளித்திருந்தார்.

"3 பேரும் இனி என் சகோதரிகள். அவர்களுக்கான உதவிகளை நானே செய்கிறேன். உடனடி பணத் தேவைக்கும் ஏற்பாடு செய்துள்ளேன்," என அவர் பதிவிட, நிமிடங்களில் ட்விட்டர் தளமே பரபரப்பானது. உடனே அந்தக் குடும்பத்துக்குப் போன் போட்டேன். "சசிகுமார் சார் தரப்பில் பேசினாங்க சார். எல்லா உதவியும் செய்யிறதா சொன்னாங்க..." என தழுதழுத்தார்கள்.

சேலம் பத்திரிகையாளர் விஜயகுமார் மூலமாக இப்போதைய உடனடி தேவைகளுக்காக 50,000 பணம் அந்தக் குடும்பத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சசிகுமார் சாருக்கு நன்றி சொன்னேன். "இதை என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாமே... எதுக்கு பதிவு?" என வழக்கம்போல் வருத்தப்பட்டார்.

"உங்ககிட்ட நிறைய உதவிகள் இப்படி வாங்கியாச்சு சார்...," என்றேன்.

"அந்தக் குடும்பத்துக்கு என்ன தேவைன்னாலும் சொல்லச் சொல்லி இருக்கேன். நீங்களும் கேட்டுச் சொல்லுங்க. அந்தப் பொண்ணுங்க பெரிசா சாதிக்கணும்" என்றார்.

உதவி கிடைத்த நெகிழ்வில் அந்தக் குடும்பத்தின் சகோதரி அபிராமி போன் பேசினார். வார்த்தைகள் ஏதுமற்று அவர் ஸ்தம்பித்திருக்க, அது புரியாமல் நான் ஹலோ... ஹலோ... என கத்திக் கொண்டிருந்தேன். லைன் கட்டாகிடுச்சோ என நினைத்த நேரத்தில், "நன்றிண்ணே..." என்றார் தயக்கத்தோடு. நேரில் பார்த்திராத அபிராமியை, கூடப் பிறந்தவளாக மாற்றியது அந்தக் குரல். உயிர் தொட்ட அந்த ஒரு வார்த்தை 'ஏழையின் நன்றி இப்படித்தான் இருக்கும்' எனக் கலங்க வைத்தது.

சசிகுமார் சாருக்கு மறுபடியும் போன் போட்டுச் சொன்னேன்:

"நன்றிண்ணே..."

English summary
Director Sasikumar has done big help to a poor weightlifting girls family after know their poverty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil