தேவா தம்பி சபேஷுக்கும் டியூட் படத்துக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா?.. ச்ச அவரை மிஸ் பண்ணிட்டோமே
சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் சகோதரர்களில் ஒருவர் சபேஷ். தேவாவுக்கு இசை துறையில் எல்லாமுமாக இருந்த அவர் உடல்நல குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சபேஷின் உயிரிழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு இசையமைத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. அவரது சகோதரர்களில் ஒருவர்தான் சபேஷ். அவரும் இன்னொரு சகோதரரான முரளியும் சேர்ந்து தேவா இசையமைத்த படங்களில் தொடர்ந்து பணியாற்றிவந்தார்கள். ரீ ரெக்கார்டிங், வாத்தியங்கள் வாசிப்பது, பாடல்கள் பாடுவது என அவர்கள் தேவாவின் இரண்டு கைகளாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை. பல படங்களின் டைட்டில் கார்டுகளில் சபேஷ் - முரளி என்ற பெயரை பார்த்திருக்கலாம்.
தேவாவின் வலது கை: அவர்களில் சபேஷ் ரொம்பவே ஸ்பெஷலானவர். அடிப்படையில் கீபோர்டு ப்ளேயரான அவர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என பலருக்கு கீபோர்டு வாசித்திருக்கிறார். தேவா வளர்ந்த பிறகு முழுக்க முழுக்க அவரது வலது கையாக மாறினார் சபேஷ். தேவாவின் பலங்களில் ஒன்று கானா பாடல்கள். அவர் இசையமைத்த காத்தடிக்குது காத்தடிக்கும், குன்றத்துல கோயில கட்டி என ஏராளமான கானா பாடல்களை பாடியது சபேஷ்தான்.

இசையமைப்பாளர் சபேஷ்: தேவாவோடு மட்டுமின்றி தனியாகவும் பணியாற்றியிருக்கிறார் சபேஷ். அந்தவகையில் சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து என 40 படங்கள்வரை இசையமைத்திருக்கிறார். இன்றுவரை, 'நிலா நீ வானம் காற்று' பாடல் பல காதலர்களின் பொக்கிஷமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற, 'ஒரே ஒரு ஊருக்குள்ள பாடல் ஒரே ஒரு அப்பா, அம்மா' பாடலும் காலத்தால் அழிக்க முடியாதது.
உடல்நல குறைவு: இப்படிப்பட்ட சூழலில் சமீப காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனையொட்டி சிகிச்சையும் எடுத்துவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதிலும் தேவாவை ரொம்பவே நிலைகுலைய செய்திருக்கிறது. எனது வலது கையை இழந்துவிட்டேன் என்று தேவாவும் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட டியூட் படத்தில் சபேஷும் பங்காற்றியிருக்கிறார்.
என்ன பங்கு?: அதாவது டியூட் படத்தில் சரத்குமார் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அந்த ரோலை மிக சிறப்பாக செய்து படத்தின் வெற்றிக்கு உதவினார். அவர் படத்தில் இன்ட்ரோ ஆகும்போது, ஏய் படத்தில் இடம்பெற்ற மயிலாப்பூரு மயிலே மயிலே என்ற பாடல் ஒலிக்கும். அந்தப் பாடலை பாடியவர் சபேஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர் சந்திப்பில் நினைவுகூர்ந்தார். மேலும் இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு சபேஷிடமும் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு கலைஞனின் திறமை காலங்கடந்தும் கொண்டாடப்படும், பயன்படுத்தப்படும் என்பதற்கு சபேஷ் ஒரு உதாரணமாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











