»   »  புதையல் தொலைந்தது.. ஜி.வி.பிரகாஷ்: கலாம் மறைவுக்கு ட்விட்டரில் நட்சத்திரங்கள் இரங்கல்

புதையல் தொலைந்தது.. ஜி.வி.பிரகாஷ்: கலாம் மறைவுக்கு ட்விட்டரில் நட்சத்திரங்கள் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று இரவு எல்லோருக்குமே ஒரு துக்கமான நாளாக மாறிவிட்டது, இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அயராது உழைத்து இந்த நாட்டிற்காக திருமணமே செய்யாமல் தனது வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் ஒருவரின் விலைமதிப்பற்ற உயிரை காலன் நம்மிடம் இருந்து பறித்துக் கொண்டான்.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கனக்கான மக்களையும் கண்ணீர் சிந்த வைத்து விட்டது அந்த மாமனிதரின் மரணம், ஆம் நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தலை சிறந்த விஞ்ஞானியுமாகிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் இறந்து விட்டார்கள்.

பாமரர் முதல் படித்தவர் வரை வேறுபாடின்றி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றனர், தான் உயிருக்கு உயிராக நேசித்த மாணவர்களின் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

தனது கடைசி நிமிடங்களையும் கூட மாணவர்களுடன் கழிக்கும் பேறுபெற்ற அந்த மகானின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி, திரைப்பட நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.

அவற்றில் இருந்து சில இரங்கல்களை இங்கே நாம் காணலாம்.

மிகப் பயங்கரமாக உணர்கிறேன் - தனுஷ்

"நம் நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது, மிகப் பயங்கரமாக உணர்கிறேன். டாக்டர் அப்துல் கலாம் சார் நீங்கள் அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

அமைதியாக ஓய்வு எடுங்கள் ஏவுகணை மனிதரே - சிவகார்த்திகேயன்

"ஏவுகணை மனிதரே பல கோடிக்கனக்கான மக்களின் உத்வேகமாக தாங்கள் இருந்தீர்கள் ஐயா, தற்போது அமைதியாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நேற்றுவரை தனது புகைப்படத்தை வைத்திருந்த சிவகார்த்திகேயன் தற்போது திரு அப்துல்கலாம் ஐயா அவர்களின் படத்தை புரோபைல் பிக்சராக
வைத்திருக்கிறார்.

நாட்டின் மிகப்பெரிய இழப்பு இது - விஷால்

நமது நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் அவர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டார், நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு இது. நான் எப்பொழுதும் எனது முன்மாதிரியாக தாங்களைத் தான் எடுத்துக் கொள்வேன் சார், உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று நடிகர் விஷால் தனது வருத்தத்தைப் படம்பிடித்து காட்டியிருக்கிறார்.

உழைப்பினால் கவர்ந்தவர் - ஆர்யா

திரு. அப்துல்கலாம் அவர்கள் தனது ஈடு இணையற்ற உழைப்பினால் லட்சக்கணக்கான மக்களின் முன்மாதிரியாக இருந்தவர். நீங்கள் யாருக்காவது முன்மாதிரியாக இருக்க விரும்பினால் உங்கள் உழைப்பினால் திகழுங்கள் என்று வருத்தத்துடன் பதிவிட்டு இருக்கும் ஆர்யா தனது புரோபைல் பிக்சராக திரு கலாம் அவர்களின் படத்தை வைத்து இருக்கிறார்.

பிறப்பு முக்கியம் அல்ல - சூர்யா

'எப்படிப் பிறந்தோம் என்பது முக்கியம் அல்ல எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம், உங்களின் தொலைநோக்குப் பார்வையும் உண்மையான உழைப்பும் தான் சாதாரண பேப்பர் போடும் பையனாக இருந்த தங்களை இந்த நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்த்தியது. உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று நடிகர் சூர்யா தனது இரங்கல்களைத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியநாட்டின் முன்மாதிரி தாங்கள் - எஸ்.எஸ்.ராஜமௌலி

"அப்துல் கலாம் சார் இந்த இந்திய நாட்டின் முன்மாதிரி தாங்கள், நாங்கள் உங்களுக்கு என்றும் கடமைப் பட்டு இருக்கிறோம்" என்று இயக்குநர் ராஜமௌலி தெரிவித்து இருக்கிறார்.

நாட்டின் விலைமதிப்பற்ற வைரம் - குஷ்பூ

இந்த நாட்டின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் நீங்கள், தயவுசெய்து மீண்டு வாருங்கள். இந்த நாட்டிற்கு உங்களைப் போன்ற நல்ல ஆத்மாக்கள் தான் தேவை, இன்று இந்த நாடே எழுந்து நின்று உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும்" என்று மிகவும் உருக்கமாக நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ ட்வீட்டி இருக்கிறார்.

புதையல் தொலைந்தது - ஜி.வி.பிரகாஷ் குமார்

"நம் நாட்டின் மிகப்பெரிய புதையலை நம் இழந்து விட்டோம், இந்தியர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்த திரு. அப்துல்கலாம் ஐயா இன்று நம்மிடையே இல்லை. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இளைஞர்களின் வழிகாட்டி - ராதிகா சரத்குமார்

மரியாதைக்குரிய திரு.அப்துல்கலாம் ஐயா அவர்களின் இறப்பு நம் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு, நாடு மட்டுமன்று இளைஞர்களின் வாழ்விலும் தடைகளைத் தகர்த்தெறியும் ஒரு பாதையாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் மனிதர் இறந்துவிட்டார். மக்களின் மனிதனை நாம் இழந்து விட்டோம் என்று நடிகை ராதிகா சரத்குமார் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

English summary
Dr.APJ Abdulkalam Passes Away- Related Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil