காவி பிகினி சர்ச்சை.. ஷாருக்கானின் உருவ பொம்மை எரிப்பு.. வெளியாகுமா பதான் திரைப்படம்?
இந்தூர்: ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதான் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'பேஷ்ரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் காவி நிற பிகினியில் படு கிளாமராக ஆட்டம் போட்டிருந்தார்.
பிகினி காவி நிறத்தில் இருப்பதை கையில் எடுத்துள்ள இந்துத்துவா அமைப்புகள் தற்போது ஷாருக்கான், தீபிகா படுகோனேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அமைச்சர் கண்டனம்
ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி 25ம் தேதி வெளியாகவிருக்கும் பதான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. 2018க்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் பாலிவுட்டிலும் அதிகம் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தற்போது பதான் படத்தின் ரிலீஸுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 12ம் தேதி வெளியானது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் மிக கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், பல தரப்பில் இருந்தும் கண்டனஙளையும் பெற்று வருகிறது. முதல் ஆளாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையான காவி பிகினி
'பேஷ்ரம் ரங்' என்ற அந்தப் பாடலில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தார். இந்த பிகினி மிகவும் ஆட்சேபனைக்குரியது, மேலும், இது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டுள்ளது. தீபிகாவின் உடையில் இருக்கும் நிறத்தை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் இந்தப் படத்தை மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டி இருக்கும் எனக் கூறியுள்ளார். நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்ததில் இருந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உருவ பொம்மை எரிப்பு
இதனைத் தொடர்ந்து ஷாருக்கான், தீபிகா படுகோனின் உருவ பொம்மைகள் எரிப்பு போராட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. வீர சிவாஜி குழுவினரால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோரின் உருவ பொம்மைகளை போராட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர். இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக தீபிகாவிற்கு காவி பிகினியை அணிவித்தது தவறான செயல் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். தீபிகாவின் பிகினியின் காவி நிறத்தை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும் எனவும், பதான் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வெளியாகுமா பதான்?
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள பதான், ஷாருக்கானுக்கு மாஸ் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பாடல் வெளியானது முதலே பாய்காட் சிக்கலில் தவித்து வருவதால், ஷாருக்கானின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அதேநேரம் காவி பிகினிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் 'பாய்காட் பதான்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால், படம் சொன்னபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











