»   »  ஏவி.எம்மை புறக்கணிக்கும் பத்திரிக்கையாளர்கள்

ஏவி.எம்மை புறக்கணிக்கும் பத்திரிக்கையாளர்கள்

Subscribe to Oneindia Tamil


சிவாஜி பட வெள்ளி விழாவுக்கு பத்திரிக்கையாளர்கள், ஆன்லைன் பத்திரிக்கையாளர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அழைப்பிதழ் தரவிவில்லை என்பதால் சிவாஜி பட விழா குறித்த அனைத்து செய்திகளையும் புறக்கணிக்க சினிமா செய்தியாளர்களில் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த விழாவுக்கு பத்திரிகைகள், ஆன்லைன் செய்தியாளர்களுக்கு ஏவி.எம். நிறுவனம் அழைப்பு கொடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்த சினிமா செய்தியாளர்களில் ஒரு பிரிவினர் சிவாஜி பட விழா தொடர்பான செய்திகளையும், ஏவி.எம். நிறுவனத்தின் எதிர்கால படங்கள் குறித்த செய்திகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஏவி.எம். நிறுவன தலைமை செயலதிகாரி பாபுவை தொடர்பு கொண்ட நாம் கேட்டபோது, தினசரி பத்திரிகைகளுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்குமாறு முதல்வர் கருணாநிதிதான் கேட்டுக் கொண்டார். இதனால்தான் மற்ற பத்திரிகைகள், ஆன்லைன் பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்றார்.

முதல்வர் அலுவலகம் மற்றும் செய்தி விளம்பரத்துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் இதுகுறித்து உறுதி செய்து கொள்ள முயன்றபோது, அப்படி எந்த உத்தரவும் முதல்வர் அலுவலகத்திலிருந்து பிறப்பிக்கப்படவில்லை என்றும், இது தனியார் விழா, இதற்கும், அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்து விட்டனர்.

என்னதான் நடந்தது என்று விசாரித்துப் பார்த்தபோது, சிவாஜி பட விழாவைப் படம் பிடிக்கும் பொறுப்பு பெரும் தொகைக்கு கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிகழ்ச்சியை 15ம் தேதியன்று கலைஞர் டிவி ஒளிபரப்பவுள்ளது. எனவேதான், பட விழா தொடர்பான புகைப்படங்கள் வெளியில் வந்து விடக் கூடாது என்பதற்காகவே ஏவி.எம். நிறுவனம் தினசரிகளைத் தவிர மற்ற பத்திரிக்கையாளர்களைப் புறக்கணித்துள்ளது தெரிய வந்தது.

மேலும் சிவாஜி படம் தொடர்பான எந்த செய்தியையும் பத்திரிகைகளுக்கு தரக் கூடாது என்றும் நிறுவன பி.ஆர்.ஓவிடம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ். குஹன் கண்டிப்பாக கூறியுள்ளாராம்.

ஏவி.எம். நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு சிவாஜி படத்தால் பல பகுதிகளில் விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானதே காரணமாம். அந்த கோபத்தில்தான் தினசரிகளைத் தவிர மற்ற பத்திரிக்கைகள், இணையதளங்களை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்க ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்ததாம்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் .. என்ற பழமொழியை உரியவர்கள் உணர்ந்தால் சரி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil