For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அக்காவை தேர்வு செய்துவிட்டு, தங்கையை ஜோடியாக்கிய பாக்யராஜ்! - ஒரு ப்ளாஷ்பேக்

  By Shankar
  |

  ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தை யாராலும் மறக்க முடியாது. அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ''என்னுடைய கலையுலக வாரிசு பாக்யராஜ்'' என்று பொதுமேடையில் பெருமையாக அறிவிக்க வைத்த மாபெரும் வெற்றிப் படம் அது.

  அந்தக் காலத்தில் இப்படம் ஒரு 'டிரென்ட் செட்டர்' என்றே சொல்லப்பட்டது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெகா ஹிட்டானது. பின்னணி இசை, படத்தை முன்னணிக்குக் கொண்டு வந்தது. அப்படத்தின் சாதனையை, பாக்யராஜின் வேறெந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

  How actress Urvasi becomes leading heroine? A Flashback

  'முந்தானை முடிச்சு' உருவானபோது, யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் மூழ்கிய பாக்யராஜ், கலாரஞ்சனி என்ற இளம் பெண்ணை வரவழைத்து 'டெஸ்ட் ஷ¨ட்' நடத்தினார். அப்போது அவருடன் வந்த பள்ளி மாணவி, துறுதுறுவென்று இருந்தார். பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு கலாரஞ்சனி பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு பதிலளித்தார். ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த பாக்யராஜ், ''யார் இது முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணன்னு பேசிகிட்டு...'' என்று கத்தினார். அவ்வளவுதான், அந்த மாணவி பம்மிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

  பிறகு வீட்டுக்கு வந்த மாணவி, ''சரியான சிடுமூஞ்சி டைரக்டரா இருக்காரு. இவரோட டைரக்ஷன்ல எல்லாம் அக்காவை நடிக்க வைக்க வேணாம்'' என்றார். மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைத்த தங்கையின் பேச்சைக் கேட்டு மிரண்ட கலாரஞ்சனி, ''ஏய்... அவரு பெரிய டைரக்டரு. இப்படி எல்லாம் பேசக்கூடாது'' என்று கண்டித்தார். ஆனால், 'முந்தானை முடிச்சு' படப்பிடிப்பு தொடங்கும் வேளையில், திடீரென்று கலாரஞ்சனியை நிராகரித்து விட்டார் பாக்யராஜ்.

  வேறொரு ஹீரோயினுக்கு வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது, டெஸ்ட் ஷூட் நேரத்தில் முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மாணவி ஞாபகத்துக்கு வரவே, ''அந்த பொண்ணை கூட்டிகிட்டு வாங்கய்யா'' என்று பாக்யராஜ் ஆர்டர் போடவே, உதவி இயக்குனர்கள் ஆளுக்கொரு பக்கம் பறந்து, அந்த மாணவியை அழைத்து வந்தார்கள். தன்னைத் திட்டிய இயக்குனருக்கு எதிரில் வந்து நின்ற மாணவி, ''இப்ப எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?'' என்று துடுக்குத்தனமாகக் கேட்டார். அதைப் பெரிதும் ரசித்த பாக்யராஜ், ''நீதான் என் படத்துக்கு கதாநாயகி. ரெடியா இரு'' என்றார்.

  இப்படித்தான் 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார்.

  ''அப்ப எனக்கு எந்த விவரமும் தெரியாது. டி.வியில் 'ஒளியும் ஒலியும்' பார்த்து முடிச்சதும் தூங்கிடுவேன். அப்படிப்பட்ட நான், ஷூட்டிங் ஸ்பாட்டுல பாக்யராஜ் சாருக்கு கொடுத்த தொல்லை ஏராளம்... ஏராளம். அதையெல்லாம் பொறுத்துகிட்டு, எப்படியோ என்னை ஒரு முன்னணி கதாநாயகியா மாத்திக் காட்டினாரு பாருங்க... அதான் எங்க டைரக்டரோட பெருந்தன்மை.

  How actress Urvasi becomes leading heroine? A Flashback

  ஒருநாள் நைட் ஷூட்டிங். பாக்யராஜ் சார், நான், அந்த கைக்குழந்தை நடிக்கும் ''சின்னஞ்சிறு கிளியே... சித்திரப் பூவிழியே'' பாட்டை படமாக்கிட்டு இருந்தாங்க. எனக்குதான் ராத்திரி ஏழு மணி ஆனவுடனே தூக்கம் வந்துடுமே. அப்படியே தூங்கித் தூங்கி வழிஞ்சேன். அதனாலயே அந்த பாட்டை ஷூட் பண்ண அதிக நாளாச்சி. என்னால நடிக்க முடியலன்னு, 'ஓ'ன்னு அழுவேன். இதையெல்லாம் பல்லை கடிச்சிகிட்டு, எங்க வாத்தியார் ஷூட் பண்ணி முடிச்சார். அவர் இல்லன்னா, இந்த ஊர்வசி இல்ல.

  இன்னைக்கி நடிப்புல கமல் சார் கூட என்னை கம்பேர் பண்ணி ஆடியன்ஸ் பேசறாங்கன்னா, அதுக்கு பாக்யராஜ் சார் போட்ட பிச்சைதான் காரணம். அவரை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்'' என்று, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் ஊர்வசி.

  கல்பனா, கலாரஞ்சனி, ஊர்வசி சகோதரிகள் பல மொழிப் படங்களில் நடித்துள்ளனர். கே.பாக்யராஜின் 'சின்ன வீடு' படத்தில், கல்பனா ஹீரோயினாக நடித்திருந்தார். பொதுவாக இந்த சகோதரிகள், மலையாளத்தில் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளனர் அதுபோல், மூவருமே தாங்கள் காதலித்து மணந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

  கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர்வசி, தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

  நடிகர் யோகி தேவராஜின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து...

  English summary
  How actress Urvasi was selected by K Bagyaraj as his heroine? Here is a flashback from actor Yogi Devaraj's facebook page.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X