»   »  லவ் அன்ட் லவ் ஒன்லி... ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்த இளையராஜா!

லவ் அன்ட் லவ் ஒன்லி... ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்த இளையராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லவ் அன்ட் லவ் ஒன்லி என்ற ஆங்கிலப் படத்துக்காக 21 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

மதுரையில் பிறந்து 2003 முதல் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இயக்குநர் ஜூலியன் கரிகாலன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Ilaiyaraaja composes for English movie

இந்தப் படம் குறித்து கரிகாலன் கூறுகையில், "முதலில் இந்தப்படத்தை ஆரம்பித்தபோது இளையராஜா சாருக்குச் சம்பளம் வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை. அவர் இசையமைக்க ஒப்புக்கொண்டால் பட்ஜெட்டை அதிகமாக்கும் முடிவில் இருந்தேன். குறைந்த செலவில் படமாக்கப்படும் படம் என்பதால் அவரும் குறைவாகவே சம்பளம் பெற்றார். அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்த யாரும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பைத் தவறவிடமாட்டார்கள்.

அவருடைய யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் அளித்த பேட்டியைப் பார்த்தேன். அதில் புதியவர்களைத் தான் ஊக்கப்படுத்தத் தயார் என்று கூறியிருந்தார். அதைப் பார்த்தபிறகே அவரை அணுகவேண்டும் என்று தோன்றியது. முதல்முறையாக அவர் ஆங்கிலப் படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.

திரையரங்குகளில் படத்தை வெளியிட விருப்பமில்லை. அதற்குப் பதிலாக அமேசானில் வீடியோ ஆன் டிமாண்ட் என்கிற வழிமுறையில் வெளியிட்டுள்ளேன். எனவே இந்தப் படத்தை ஆன்லைனில் மட்டுமே காணமுடியும்.

படத்தைப் பார்த்துவிட்டு பல மணி நேரங்களாக அவர் என்னைச் சந்திக்கவில்லை. இதனால் எனக்குப் பதற்றமாக இருந்தது. அவருக்குப் படம் பிடிக்கவில்லை என்று எண்ணினேன். பிறகு சந்தித்தபோது படத்துக்கு இசையமைக்க தனக்கு சிறிதுநேரம் தேவைப்படுவதாகக் கூறினார். இது ஆங்கிலப் படம் என்பதால் அதற்கேற்றாற்போல் இசையமைக்கவேண்டும் என்று அவர் கருதினார். இது சாதாரணப் படமாக இருந்திருந்தால் உடனே இசையமைத்திருப்பேன் என்று அவர் சொன்னது எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது.

பாடல்களுக்கு ராஜா சார் ட்யூன் அமைக்கும் விதமும் பின்னணி இசையும் என்னை அசரவைத்தன. வழக்கமாக சில மணி நேரங்களில் படத்தின் கம்போஸிங்கை முடித்துவிடுவார் என்பார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு அவருக்கு 5 நாள்கள் தேவைப்பட்டன.

படவிழாக்களில் திரையிட்டபோது 130 நிமிடங்களும் மக்கள் உணர்வுபூர்வமாகப் படம் பார்த்தார்கள். அவர்கள் அழுததையும் சிரித்ததையும் மகிழ்ச்சி அடைந்ததையும் என்னால் உணரமுடிந்தது. இதற்குக் காரணம், இளையராஜாவின் இசை. அவருடைய இசையைக் கேட்டறியாத வெளிநாட்டு ரசிகர்கள் நிச்சயம் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைமீது காதல் கொள்வார்கள்," என்கிறார்.

இந்தப் படத்தில் ரோஹித் காலியா, ஜார்ஜியா நிகோலஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று ஆண்டுகள் படமாக்கப்பட்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த இசைக்கான விருதுகள் கிடைத்துள்ளது.

இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த ஆங்கிலப் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா என்பது கூடுதல் தகவல்.

English summary
Maestro Ilaiyaraaja has composed music for an English movie titled Love and Love only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil